தமிழகத்தில் தொடர் கதைகளுக்காகத் தொடங்கப்பட்டிருக்கும் BYNGE செயலியில் வெளிவரவிருக்கிறது பிரபு தேவாவின் வாழ்க்கைத்தொடர். அதுவும் முதல் முறையாக ஆடியோ வடிவில்.
பிரபு தேவா என்றதும் கூச்ச சுபாவம், நெற்றியை நிறைக்கும் திருநீறு, ரப்பர் போல உடலை வளைத்து ஆடும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், சினிமா இயக்குநர் என்று பல பிம்பங்கள் நம் மனதுக்குள் நிழலாடும்.
அதற்கெல்லாம் விடை சொல்வது போல முதன்முறையாக தன் பர்சனல் பக்கங்களை, வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை நமக்காக வெளிப்படையாக, ‘டேக் இட் ஈசி பாலிசி’ என்கிற தலைப்பில் மனம் திறந்து பேசுகிறார் பிரபுதேவா.
தான் அதிகம் பேசாமல் அமைதியாகிப் போனதுக்கான காரணம், தன் தாடிக்குப் பின்னால் இருக்கும் ரகசியம், அப்பாவின் முன்னால் போன் பேசாதது ஏன், வாங்கிய முதல் சம்பளம், மைக்கேல் ஜாக்சன் சந்திப்பு, காதல், திருமணம், நண்பர்கள் என அனைத்தை பற்றியும் தன் குரலில் நம்மிடம் பகிர்ந்திருக்கிறார் பிரபுதேவா. அவரது ஞாபகங்களுக்கு தன் குரல் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார் ஆர்.ஜே தியாகு.
“இதுவரைக்கும் என்னை ஒரு டான்ஸராக, கோரியோகிராபராக, நடிகராக, இயக்குநராக மட்டும் தெரியும். ஆனால், இந்த ஆடியோ புக்ல நீங்க கேட்டீங்கனா, நான் எவ்ளோ சாதாரணமான ஆள்னு தெரியவரும். ரொம்ப புதுசா இருக்கு எனக்கு இந்த ஆடியோ புக். டேக் இட் ஈசி பாலிசி. கேளுங்க” என்கிறார் பிரபுதேவா. BYNGE செயலியில் தினமும் பிரபு தேவாவின் ஆடியோ வெளியாக உள்ளது.







