தமிழ்நாட்டில் 10 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க அனுமதி – அரசாணை வெளியீடு!

கொளத்தூர், சேப்பாக்கம், வாணியம்பாடி, காங்கேயம், சோழவந்தான், உள்ளிட்ட பத்து தொகுதிகளில் தலா 3 கோடி ரூபாய் மதிப்பில் மினி விளையாட்டரங்கம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு…

கொளத்தூர், சேப்பாக்கம், வாணியம்பாடி, காங்கேயம், சோழவந்தான், உள்ளிட்ட பத்து தொகுதிகளில் தலா 3 கோடி ரூபாய் மதிப்பில் மினி விளையாட்டரங்கம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் தினமும் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த 11-ஆம் தேதி அன்று விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்து பேசினார். அதனை தொடர்ந்து விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறையில் 31 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

அதில், தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டது. இதில், மாவட்ட தலைநகர் உட்பட 61 தொகுதிகளில் ஏற்கனவே விளையாட்டு அரங்கங்கள் இருப்பது கண்டறியப்பட்டது என தெரிவித்திருந்தார். இதுதவிர தமிழகத்தில் மீதமுள்ள 173 தொகுதிகளில் மினி மினி ஸ்டேடியங்கள் அமைக்கப்படும் என்றும், புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய திறந்தவெளி மற்றும் உள் விளையாட்டு அரங்குகள் நிறுவப்படும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், 173 தொகுதிகளில் மினி ஸ்டேடியங்கள் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் பனி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

இந்த நிலையில், கொளத்தூர், சேப்பாக்கம், வாணியம்பாடி, காங்கேயம், சோழவந்தான், திருவெரும்பூர், ஸ்ரீவைகுண்டம், பத்மநாதபுரம், ஆலங்குடி, காரைக்குடி ஆகிய பத்து தொகுதிகளில், மினி ஸ்டேடியம் அமைக்க நிர்வாக அனுமதி தரப்பட்டுள்ளது. இதற்காக தலா 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, மினி விளையாட்டரங்கம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.