பெரியார் பல்கலையில் சாதி குறித்த கேள்வி: 3 பேர் கொண்ட குழு அமைப்பு

சேலம் பெரியார் பல்கலையில் சாதி பற்றி கேள்வி கேட்கப்பட்டது தொடர்பாக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு 2ஆம் ஆண்டு…

சேலம் பெரியார் பல்கலையில் சாதி பற்றி கேள்வி கேட்கப்பட்டது தொடர்பாக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு 2ஆம் ஆண்டு தேர்வு வினாத்தாளில், 4 சாதிப் பிரிவுகளைக் குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி இடம்பெற்றுள்ளது. இந்த கேள்வி கடும் சர்ச்சைக்குள்ளானது. சாதியை ஒழிக்கப் போராடிய பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தில் சாதி குறித்து கேட்கப்பட்ட கேள்வி பெரும் விவாதப் பொருளாக மாறியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி குறித்த கேள்வி கேட்கப்பட்டது தொடர்பாக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தலைமைச்செயலகத்தில் ஆஸ்திரேலிய அமைச்சர் டேவிட் டெம்பிள்மேனை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டியில், மற்ற நாடுகளின் பல்கலைகளுடன் தொடர்பு கொண்டு பயிற்சியை உருவாக்க வேண்டும் என்பதால் ஆஸ்திரேலிய அமைச்சருடன் சந்திப்பு என தெரிவித்தார்

சேலம் பெரியார் பல்கலை கேள்வித்தாள் விவகாரம் தொடர்பாகப் பேசிய அமைச்சர்,  உயர் கல்வித் துறை இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸை தலைவராகவும், விசாரணை அலுவலர்களாக தனசேகர், விஜயலட்சுமி ஆகியோரைக் கொண்ட 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு ஒரு வாரத்திற்குள் விசாரணை செய்து அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கடந்த காலங்களில் தவறுகள் இழைத்த கல்லூரிப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஸ்லெட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் பேராசிரியர்களாக நியமிக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.