சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த மதுரவாயலில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென கனல் கண்ணன் பேசினார். இதையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் ஆகஸ்ட் 11ம் தேதி கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு கனல் கண்ணன் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வெறுப்பை பரப்பும் வகையில் கனல் கண்ணன் பேசியுள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 4 வார காலத்திற்கு விசாரணை அதிகாரி முன்பு காலை மற்றும் மாலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும், இனி இது போன்று பேசமாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
நீங்கள் ஒரு கட்சியில் இருக்கும் போது மாற்று கொள்கைவுடையர் குறித்து ஏன் பேச வேண்டும்? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், இது போன்ற தேவையற்ற கருத்துகளை யூடியூப்-ல் பேசுவது பேசனாகி விட்டது எனவும் கருத்து தெரிவித்தனர்.







