அமைச்சர் பிடிஆர்.ஐ சந்திக்கத் திட்டமிட்டுள்ள அன்பில் மகேஷ் – காரணம் இதுதான்!

தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து, ஆசிரியர்களின் 15 வகையான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வலியுறுத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டமிட்டுள்ளார். 2021 சட்டப் பேரவைத் தேர்தல் நேரத்தில்…

தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து, ஆசிரியர்களின் 15
வகையான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வலியுறுத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டமிட்டுள்ளார்.

2021 சட்டப் பேரவைத் தேர்தல் நேரத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்ந்த பல திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று திமுக வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.
ஆனால், தேர்தலுக்குப் பின் பள்ளிக் கல்வித் துறையில் பெரிதாக வாக்குறுதிகள்
எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இது ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிருப்தியை ஏற்ப்படுத்தியுள்ள நிலையில், வரும் செப்டம்பர் 10-ம் தேதி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ – ஜியோ நடத்தும் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார்.

இந்த மாநாட்டிற்கு முன்னதாக ஆசிரியர்கள் வலியுறுத்தக் கூடிய பல கோரிக்கைகளில்
சில கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 15 வகையான கோரிக்கைகளை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்யுமாறு வலியுறுத்துவதற்குத் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

15 கோரிக்கைகள் என்னென்ன?….

விடுபட்டுப்போன 171 தொழிற்கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது, எல்கேஜி
முதல் ஐந்தாம் வகுப்பு வரை கூடுதல் ஆசிரியர்களை பணி நியமனம் செய்வது, அரசு
மாதிரி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களை பணி நிரந்தரம்
செய்வது, அரசாணை 101 மற்றும் 108 ஆகியவற்றை சீரமைப்பு செய்வது, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமனம் செய்வது, அரசுப் பள்ளிகளில் 2,500 வகுப்பறைகளை கட்டுவது உள்ளிட்ட அம்சங்கள் நிதியமைச்சர் உடனான சந்திப்பின்போது இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிதியமைச்சரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் இடையேயான சந்திப்பு, இன்னும்
ஓரிரு நாளில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆசிரியர்கள் முக்கியமாக எதிர்பார்க்கும் கோரிக்கைகளில் ஒன்றான அதிமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட அரசாணைகள் 101,108ஐ ரத்து செய்வது என்ற கோரிக்கை நிதி அமைச்சர் உடனான சந்திப்பின்போது வலியுறுத்தப்பட இருக்கிறது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.