காலணி அணிவதை போல மக்கள் இனி முகக்கவசங்களை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். இதில், “நாடு முழுவதும் 100 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதுவும் இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி வெற்றி, அனைவருக்கும் வளர்ச்சி அனைவரின் முயற்சி என்பதை பிரதிபலிப்பதாக உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
100 கோடி தடுப்பூசிகள் என்பது வெறும் எண்கள் மட்டுமல்ல. இது நாட்டின் திறனை பிரதிபலித்துள்ளது. இது நாட்டின் புதிய அத்தியாயம், மிகப்பெரிய இலக்குகளை அடையத் தெரிந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இந்தியர் ஒவ்வொருவருக்கும் இந்த சாதனையில் பங்கு உள்ளது. கொரோனா குறித்த அனைத்து விமர்சனங்களுக்கும் இந்த சாதனை பதிலளித்துள்ளது. இந்தியாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உலகமே உற்றுநோக்குகிறது.
மக்களோடு இருப்பதால்தான் 100 கோடி டோஸ் தடுப்பூசி என்ற சாதனை சாத்தியமாகியுள்ளது. கைதட்டி கொரோனாவை ஒழிக்க முடியுமா என கேள்வி எழுப்பினர், ஆனால் அது தேசிய ஒற்றுமையை வெளிப்படுத்தியது.
தடுப்பூசி செலுத்துவதில் விஐபிகளுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை; அனைத்து தரப்பு மக்களும் சமமாக நடத்தப்பட்டனர். சிறப்பான நடவடிக்கை மூலம் கொரோனா தடுப்பூசி திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டது. தொலைநோக்கு திட்டங்கள் மூலம் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் தாக்கம் வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கும் சூழல் அனைவருக்கும் ஏற்படும். வரும் தீபாவளி நமக்கு சிறப்பானதாக அமையும்.
காலணி அணிந்து கொண்டு வெளியே செல்வதைப் போல, முகக்கவசம் அணிவதையும் பழகிக்கொள்ள வேண்டும்.” என பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.