அடுத்த மூன்று மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோவில் செயல்படும் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமை
வாய்ந்த ராயல் காலேஜ் ஆஃப் பிசிசியன்ஸ் அண்டு சர்ஜன்ஸ் ஆஃப் கிளாஸ்கோ ( Royal
College of Physicians and surgeons of Glasgow) நிறுவனம் சார்பில் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில், மருத்துவர்கள் ஒன்று கூடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ராதாகிருஷ்ணன் பேசுகையில், “மருத்துவத் துறையில் போதுமான ஆராய்ச்சிகள் செய்யப்படவில்லை. அதை நாம் செய்ய வேண்டும். கொரோனா தொற்றுக்குப் பிறகான காலம் நமக்கு அந்த தேவையை உணர்த்தியுள்ளது. தமிழ்நாடு எப்போதும் மருத்துவத் துறையை ஊக்குவிக்கும் மாநிலமாக இருந்து வந்துள்ளது. குறிப்பாக தற்போதைய முதலமைச்சர், மருத்துவத் துறைக்கு முக்கியத்துவம் அளித்து, முக்கிய முடிவுகளை விரைவாக எடுத்து வருகிறார். மேலும், கொரோனா வார்டுக்கு சென்ற ஒரே முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன் , “ஏழை, எளிய மக்களுக்கு நவீன திறன் மற்றும் அறிவியல் சென்று சேர வேண்டும். கொரோனா 4வது அலை முந்தைய அலைகளை போல் தீவிரமாக அல்லாமல் சிறிய அலையாகவே இருக்கும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்துவதில் கவனக் குறைவு மற்றும் அலட்சியத்துடன் இருக்கின்றனர். அடுத்த 3 மாதங்கள் மக்கள் கவனமாக இருந்து அரசின் பொது சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
ம.பவித்ரா







