உதகை அருகே பெம்பட்டி கிராமத்திற்கு கடந்த 6 மாதமாக உதகை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பேருந்துகளை இயக்குவதில்லை என கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உதகை அரசு போக்குவரத்து கழகம் பணிமனை முன்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் கோவை கோட்டத்திற்குப்பட்ட உதகை மண்டலத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய நான்கு பணிமனைகள் செயல்பட்டு வருகிறது. இதில், கடந்த இரண்டு வருடங்களாக மாவட்டத்திலுள்ள பல்வேறு கிராமங்களுக்கு போதிய அரசு பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், உதகை அருகே பெம்பட்டி கிராமத்திற்கு கடந்த 6 மாத காலமாக உதகையிலிருந்து அரசு பேருந்துகளை இயக்காமல் இருந்து வந்துள்ளது. இதனால் உதகை மற்றும் பல்வேறு இடங்களுக்குச் செல்லும் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு வனப் பகுதியில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து உதகை அரசு போக்குவரத்து மண்டலத்திலுள்ள பொது மேலாளரிடம் பல முறை மனு அளித்தும் பலனளிக்காமல் இருந்த நிலையில், பெம்பட்டி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உதகை அரசு போக்குவரத்து மண்டல பொது மேலாளரை முற்றுகையிட்டு மனு அளித்தனர். அப்போது பணிமனைக்கு வந்த கிளை மேலாளர் கிராம மக்களுக்கு அலட்சியமாக பதில் தெரிவித்ததால், அனைத்து கிராம மக்களும் அவரை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
—-சௌம்யா.மோ






