ஆஷாக்கள் எங்கள் பாட்டாளி மாடல் 2.0 வின் முன்மாதிரி என்கின்றனர் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள். யார் அந்த ஆஷாக்கள் அவர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் என்ன தொடர்பு என்பதை பற்றி விவரிக்கிறார் இராமானுஜம்
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் கடந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் நாட்டில் மகப்பேறு காலத்தில் பெண்கள் இறப்பு அதிகமாக இருந்ததாக புள்ளி விபரங்கள் தெரிவித்தன. இதற்கு காரணம், கிராமபுறங்களில் வீடுகளிலேயே பின்தங்கிய மாநிலங்களில் பிரசவங்கள் மேற்கொள்வதால், இந்த இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்தது. இதனை ஒழிப்பதற்காக அன்புமணியின் மனதில் உதித்த திட்டமே ஆஷா ( Accredited Social Health Activist) ஆகும். இந்த ஆஷாக்களுக்குதான் இன்று விருது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அன்புமணி தனது டுவிட்டர் பதிவில்,
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் அறிவித்துள்ள “6 உலக சுகாதார தலைவர்கள்” விருதுகளில் ஒன்று இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களான ஆஷாக்களுக்கு (#ASHA) கிடைத்திருக்கிறது. இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியும், மன நிறைவும் அளிக்கிறது. கிராமப்புற மக்களுக்கும் மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது தான் ஆஷாக்கள் திட்டம் உருவாக்கப்பட்டது. எனது காலத்தில் தான் 8.06 லட்சம் ஆஷாக்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் கொரோனா ஒழிப்பு பணிக்காகத் தான் இந்த விருது. கொரோனா ஒழிப்புக்காக WHO விருது வென்றுள்ள ஆஷாக்கள் இந்தியாவின் பெருமை. அவர்களை உருவாக்கியவன் என்ற முறையில் அவர்கள் எனது பெருமிதம். சாதனை படைத்த 10 லட்சம் ஆஷாக்களுக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களது பணி என்பது கிராமம் கிராமமாக சென்று பேறுகாலத்திற்கு தயாராகவுள்ள பெண்களுக்கு ஊட்சத்து மருந்துகளை வழங்கி, மருத்துவமனையில் பிரசவம் பார்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகும். இதற்காக அன்றைய மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு எட்டு லட்சத்து 60 ஆயிரம் ஊழியர்களை நாடு முழுவதும் பணியில் அமர்த்தியது. இன்று இதில் 10 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள்தான் நம்நாட்டில் பெருந்தொற்றான கொரோனா காலகட்டத்தில் எல்லோரும் வீட்டை விட்டே வெளியே வர தயங்கி காலகட்டத்தில் வீடு வீடாக சென்று , உங்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா ? வேறு ஏதும் பிரச்சனை இருக்கிறதா ? கொரோனா அறிகுறிகள் எதுவும் தென்படுகின்றனவா ? என கணக்கெடுத்து அவற்றை தடுக்க உதவியவர்கள்தான் இந்த ஆஷாக்கள். அத்தோடு மட்டுமில்லால் 90 சதவீதம் பேர் இன்று கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள மிக முக்கிய காரணம் இந்த ஆஷாக்களே ஆவர்.
இதுஒருபுறமிருக்க, அன்புமணியின் செயலை பாராட்டும் விதமாக கட்சிகளை கடந்து காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரும் தனது டுவிட்டர் மூலம் அன்புமணிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அதில் அவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உயரிய சிந்தனைகளை நினைவு கூற வேண்டும். அவரது தலைமையிலான அமைச்சரவையில் உருவாக்கிய திட்டமே, இன்றைய சாதனைகளுக்கு காரணம் எனவும், இதில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் குலாம் நபி ஆஷாத் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பணிகளை யாரும் புறந்தள்ளிவிட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இப்படி பல்வேறு தரப்பில் இருந்து வரும் பாராட்டுக்களே எங்களது பாட்டாளி மாடலுக்கான எடுத்துக்காட்டுகள் என பெருமை பொங்க பேசி வருகின்றனர் பாட்டாளி சொந்தங்கள். இதனை தாங்கள் செல்வாக்காக உள்ள மாவட்டங்களில் அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டங்களை இன்று பேசப்படுகின்றன. அதுபோல் நல்லத்திட்ங்களை கொண்டு வர பாமகவை ஆதரியுங்கள் என திண்ணை பிரச்சாரங்கள் மேற்கொள்ளவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இராமானுஜம்.கி








