வேற இடமே இல்லையா?… ரயில் என்ஜினுக்கு கீழே அமர்ந்து 191 கி.மீ. பயணித்த நபர்

பாட்னா வழியாக ராஜ்கிர் – கயாவுக்கு ரயில் என்ஜினின் கீழே அமர்ந்து 191 கி.மீ. பயணித்த நபரின் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராஜ்கிரில் இருந்து வாரணாசிக்கு புத்பூர்ணிமா சார்நாத் எக்ஸ்பிரஸ் சென்றுள்ளது. இந்த…

பாட்னா வழியாக ராஜ்கிர் – கயாவுக்கு ரயில் என்ஜினின் கீழே அமர்ந்து 191 கி.மீ. பயணித்த நபரின் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ராஜ்கிரில் இருந்து வாரணாசிக்கு புத்பூர்ணிமா சார்நாத் எக்ஸ்பிரஸ் சென்றுள்ளது. இந்த ரயில் திங்கள்கிழமை அதிகாலை 4.10 மணியளவில் கயாவுக்குச் சென்றடைந்தபோதுதான், ரயிலின் என்ஜினுக்கு கீழ் உள்ள பகுதியில் ஒரு நபர் அமர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இவர் 191 கி.மீ. தூரம் ரயில் எஞ்சினின் கீழ் பகுதியில் அமர்ந்து பயணித்துள்ளார்.

இதுகுறித்து, கிழக்கு ரயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி பீரேந்திர குமார் கூறுகையில், ரயில் கயா ஜங்ஷனுக்குச் சென்றபோது லோகோ பைலட் செளத்ரி தனது கேபினில் இருந்து இறங்கியுள்ளார். அப்போது, யாரோ ஒரு மனிதர் தண்ணீர் கேட்கும் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, சப்தம் கேட்ட பகுதிக்குச் சென்றபோதுதான் ரயில் சக்கரத்துக்கு சற்று மேல் இருக்கும் என்ஜினின் கீழ் பகுதியில் ஒருவர் அமர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, ரயில் நிலையப் பணியாளர்கள் மற்றும் ரயில்வே காவல் படையினர் இணைந்து அந்த நபரை என்ஜினில் இருந்து மீட்டனர். அந்த நபரின் உடல்மொழியைப் பார்க்கும்போது அவர் மனநலம் பாதித்தவர் போலத் தோன்றியது என்றார்.

இதுகுறித்து, கயா ரயில்வே காவல் துறையினர் கூறுகையில், ராஜ்கிர் – கயா செல்லும் வழியில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து அந்த நபர் என்ஜினின் கீழ்  அமர்ந்திருக்கலாம். இது ஒரு விசித்திரமான சம்பவம். ரயிலில் இவ்வளவு இடம் இருக்கும்போது, ரயில் என்ஜினுக்கு கீழ் உள்ள அந்த சிறிய பகுதியில் அமர்ந்து எப்படி பயணித்தார் என்பது குறித்து விசராணை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.

-ம.பவித்ரா

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.