தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழக அரசு மருத்துவமனைகள் நிர்வாகச் சீர்கேட்டின் உச்சத்திற்குச் சென்றுவிட்டதை அண்மையில் நடைபெற்றிருக்கும் இரு சம்பவங்கள் அப்பட்டமாக நிரூபிக்கின்றன. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பாம்புக் கடியால் அனுமதிக்கப்பட்ட வாலிபர் ஜெகன்மூர்த்திக்கு ஆக்சிஜன் சிலிண்டரை மாற்ற அரை மணி நேரம் தாமதித்த அலட்சியத்தால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதேபோல, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி தமிழ்கொடியின் கால் விரலை எலிகள் கடித்த கொடூரச் சம்பவமும் நடந்துள்ளது. நோயைக் குணப்படுத்த வேண்டிய மருத்துவமனைகள் மரணக் கூடாரங்களாக மாறியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
இங்கு மக்கள் துயரத்தில் தவிக்கும் போது, முதலமைச்சர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் மக்களின் வேதனையை மறந்து, ‘ஜனநாயகன்’ திரைப்படம் பார்த்துச் செல்பி எடுப்பதிலும், ‘பிளாஸ்டு பிளாஸ்டு’ எனக் கொண்டாடுவதிலுமே மும்முரமாக இருக்கின்றனர்.
எனவே, இனியாவது சினிமா கொண்டாட்டங்களைக் கடந்து, காஞ்சிபுரம் வாலிபர் மரணத்திற்கும், திருச்சி மருத்துவமனையில் மூதாட்டியை எலி கடித்த விவகாரத்திற்கும் காரணமான அதிகாரிகள் மீது தவெக அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். விளம்பர மோகத்தை விடுத்து, அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பைச் சீரமைத்து, நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




