ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான “பதான்” திரைப்படம் 27 நாட்களில் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக, படத்தின் வெற்றி விழா மிக பிரமாண்டமாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிவுட்டின் தற்போதைய சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் இன்றைய 90’ஸ் கிட்ஸ் களுக்கு மிக விருப்பமான படங்களாக இருந்தாலும், கடந்த 2018-ம் ஆண்டு ரிலீஸ் ஆன ஜீரோ என்கிற திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. பிறகு நீண்ட இடைவெளியை எடுத்துக்கொண்ட
ஷாருக்கான், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ‘பதான்’ என்கிற படத்தில் நடித்து சமீபத்தில் வெளியானது.
‘வார்’ திரைப்படபுகழ் சித்தார்த் ஆனந்த் இயக்கியிருக்கும் இப்படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த போதிலும், படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியான போது அதில் நடிகை தீபிகா படுகோனே காவி நிற பிகினி உடை அணிந்து நடித்திருந்ததால் சர்ச்சை வெடித்தது. இதனால் ரிலீசுக்கு முன்பே இப்படம் பாய்காட் சர்ச்சையிலும் சிக்கியது. இருப்பினும் பலரும் இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், கடந்த ஜனவரி 25-ஆம்
தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியானது.
‘Negative Publicity’ மற்றும் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் நடித்து வெளிவரும் படம் என்ற அடிப்படையில் முதல் நாளே படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் உலகளவில் கிடைத்ததோடு, ரசிகர்களுக்கும் படம் மிகவும் பிடித்து போனதால் மிகப்பெரிய வரவேற்பு ‘பதான்’ திரைப்படத்திற்கு கிடைத்தது. அதில் குறிப்பாக ஷாருக்கானின் நடிப்பும், ஜான் ஆபிரஹாமின் வில்லத்தனமும் பலராலும் ரசிக்கப்பட்டதோடு, சிறப்பு தோற்றத்தில் வந்த
சல்மான்கானை கண்டு ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியும் கொண்டனர்.
இதனால் முதல் நாளே உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூலித்த இத்திரைப்படம், அடுத்தடுத்த நாட்களிலும் வசூலில் தொடந்து முன்னேற்றத்தையே கண்டது. இந்நிலையில், தற்போது இப்படம் வெளிவந்து 27 நாட்களிலேயே ரூ.1000 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதில் இந்திய அளவில் 623 கோடியும், வெளிநாடுகளில் 377 கோடியும் இப்படம் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த ஆண்டு ரிலீசான இந்திய திரைப்படங்களில் 1000 கோடி என்கிற மைல்கல் சாதனையை நிகழ்த்திய முதல் படம் என்கிற பெருமையை பெற்றுள்ள ”பதான்” , இதுவரை வெளிவந்துள்ள இந்திய படங்களில் அதிக வசூல் சாதனை செய்த பட்டியலில் தற்போது 5-ஆவது இடத்தை பெற்றுள்ளது. இதனால் இதை கொண்டாடும் விதமாக, படத்தின்
வெற்றி விழா மிக பிரமாண்டமாக கூடிய விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபகாலமாக தென்னிந்திய சினிமாவை ஒப்பிடுகையில், ஹிந்தி திரைப்படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய சறுக்கலை சந்தித்து வந்த நேரத்தில், தற்போது ‘பதான்’ படத்தின் இந்த மெகா வெற்றி பாலிவுட் திரையுலகிற்கு மிகப்பெரிய நம்பிக்கையை
கொடுத்துள்ளது.
- பி. ஜேம்ஸ் லிசா












