ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் இந்தியில் ரூ.432 கோடியை வசூலித்திருந்த ‘கேஜிஎஃப் 2’ பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்த பதான் படம் கடந்த 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். ‘பேஷரம் ரங்’ பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருந்த காவி பிகினி உடை, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, இப்படத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையும் படிக்கவும்: தோற்றத்தில் பிரதமர் மோடி போல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது- பானிபூரி வியாபாரி பேட்டி
இந்த எதிர்ப்புகளை மீறி வெளியான ‘பதான்’ படம் வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் என்பதால், ரசிகர்கள் தியேட்டரில் குவிந்து வருகின்றனர். முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூல் அள்ளிய இந்தப் படம் அடுத்தடுத்த நாட்களிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 4 நாட்களில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்திருந்தது.
8 நாட்கள் முடிவில் ரூ.667 கோடியும், 12 நாட்கள் முடிவில் ரூ.832 கோடியும் வசூலித்து உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வார முடிவில் பதான் படம் ரூ.900 கோடியையும் எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு வசூல் வேட்டை நடத்தி வரும் ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் இந்தியில் ரூ.432 கோடியை வசூலித்திருந்த ‘கேஜிஎஃப் 2’ பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது. அடுத்ததாக ‘பாகுபலி 2’ வசூல் சாதனையை விரைவில் முறியடிக்கும் எனக் கூறப்படுகிறது.







