பிரதமர் நரேந்திர மோடியை போன்றே தோற்றம் கொண்ட நபர் அவரை போலவே மூக்குக் கண்ணாடி, குர்தா அணிந்து கொண்டு பானி பூரி விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
உலகில் ஒருவரை போன்ற தோற்றத்தில் 7 பேர் இருப்பார்கள் என்பது நம்பிக்கை. ஆனால் அறிவியல்பூர்வமாக அதற்கு எந்தவித சான்றுகளும் இல்லை. அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்களை போன்றே உருவ ஒற்றுமை கொண்டவர்கள் சமூக வலைதங்களில் அவர்களை போன்றே ஆடை அணிந்து புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவது அவ்வப்போது சமூகவலைதளங்களில் உலாவரும்.
இதன் மூலம் அவர்களும் மக்கள் மனதில் பிரபலமாகி விடுகிறார்கள். எம்ஜிஆர், சிவாஜி, கருணாநிதி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பிரபல நடிகர்களை போன்றும் உருவ ஒற்றுமை கொண்டவர்களை பார்த்திருப்போம். அதேபோல் பிரதமர் நரேந்திர மோடி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி போன்றும் உருவ ஒற்றுமை கொண்டவர்கள் என்று பலரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வருகின்றன.
இதையும் படிக்கவும்: தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டால் மட்டுமே பாஜக வளர முடியும்- சுப்பிரமணியன் சுவாமி
இந்த நிலையில் தான் குஜராத்தை சேர்ந்த பானி பூரி வியாபாரி ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியை போன்றே உருவ ஒற்றுமை கொண்டு இருக்கிறார் என்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் வல்லப் வித்யாநகரின் மோட்டா பஜாரில் பானி பூரி கடை நடத்தி வரும் அனில் பாய் கட்டார் என்ற வியாபாரி தான் மோடியை போன்றே உருவ ஒற்றுமை கொண்டு இருப்பதாக வீடியோ வெளியாகி வருகிறது. தலைமுடி, கண்ணாடி, தாடி, குர்தா என அனைத்தையும் பிரதமர் மோடி போன்றே வைத்து அவரது உருவத்துடன் காட்சி தருகிறார் அனில் பாய் கட்டார்.
பிரபல யூடியூபர் ஒருவர், அனில் கடைக்கு பானி பூரி சாப்பிட சென்றபோது அவர் பிரதமர் மோடியின் தோற்றத்தில் இருப்பதை கண்டு வியந்து அவரிடம் பேசி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ 65 லட்சம் பார்வைகளை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த மற்ற யூடியூபர்களும், ஊடகங்களும் அனில் பாணி பூரி கடையில் குவிந்து வருகிறார்கள்.
இதுகுறித்து பேசிய அனில், “மோடி தேனீர் விற்பனை செய்தார். பிரதமர் மோடி போல் தோற்றத்தில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பானி பூரி விற்கிறேன். மோடியை போன்றே எனது பக்கவாட்டு தோற்றம் இருக்கும். அவரை போன்றே மேக் அப் செய்துகொண்டேன்” என்று கூறியிருக்கிறார்.







