டெல்லியில் கொட்டித் தீர்த்த மழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
டெல்லி உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பருவமழையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக தீவிர மழை பெய்து வருகிறது. டெல்லியில் கடந்த 24 மணி நேரமாக தொடர் மழை பெய்ததால், பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
டெல்லி சப்தர்ஜங் விமான நிலைய பகுதியில் 73.2 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. இது, இந்த வருடத்தின் அதிகபட்ச மழைப்பதிவாகும். ஆசாத் மார்க்கெட் பகுதி யில் கனமழை பெய்து வெள்ள நீர் அதிகமாகத் தேங்கியதை அடுத்து, அந்த வழியை டெல்லி போக்குவரத்து போலீசார் மூடியுள்ளனர். அதே போல மின்டோ பாலத்தையும் போக்குவரத்து போலீசார் மூடியுள்ளனர்.
பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லியின் பிரகதி மைதான், லஜ்பத் நகர் மற்றும் ஜங்புரா பகுதிகள், ஐ.டி.ஓ. ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்துள் ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் மரங்கள் சாலைகளில் விழுந்துள்ளன. அதை அப்புறப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. போக்குவரத்து நெரிசல் காரணமாக, வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
மழை, வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகள் குறித்து போக்குவரத்து போலீசார் சமூக வலைதளங் களில் தெரிவித்து வருகின்றனர். கனமழை காரணமாக, இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கையை விடுத்துள்ளது.









