நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பெகாசஸ் விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் நேற்று தொடங்கியது. அந்த உரையில், நடப்பாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசின் ஏராளமான திட்டங்களையும், சாதனைகளையும் குடியரசு தலைவர் குறிப்பிட்டிருந்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் உரையுடன், பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த ஆலோசனை நடத்தப்பட்டது. அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி எண்கள், பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக்கேட்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட மாட்டாது என தெரிவித்தார்.
இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட மாட்டாது என பிரஹலாத் ஜோஷி கூறினார். மேலும், நாடாளுமன்றத்தில் நிதியமச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.








