எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை துவங்க உள்ளதையடுத்து, டில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. நாளை தொடங்கும் மழைக் கால கூட்டத்தொடர், ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத் தொடரில், 31 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், தடுப்பூசி பற்றாக்குறை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேளாண் சட்டங்கள், மேகதாது அணை விவகாரம் உட்பட பல்வேறு முக்கிய பிரச்னைகளை கூட்டத்தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
அதில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரக் ஓ பிரையன் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட 33 கட்சிகளைச் சேர்ந்த 40 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் பேசிய பிரதமர், எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.







