பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கு, ஆலோசகர் தேர்விற்கு, சர்வதேச முன்மொழிவுக்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.
சென்னைக்கு அருகில் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்கான அடுத்தக் கட்ட பணிகளை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் தொடங்கியுள்ளது.
பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான ஆலோசகர் தேர்விற்கு சர்வதேச முன்மொழிவுக்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. மேலும், விரிவான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார அறிக்கையும் தயாரிக்க வேண்டும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அதில், கடந்த 15 ஆண்டுகளில் சென்னை விமான நிலையத்தின் பணிகள், விமான இயக்கங்கள் குறித்து அறிக்கை தயார் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. விமான போக்குவரத்தின் வளர்ச்சி நிலைகள், தேவை போன்ற அடுத்தடுத்த நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தொழில்துறை, பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு 5 வருட இடைவெளியில் 2069-70ஆம் நிதியாண்டு வரை எதிர்கால போக்குவரத்தின் கணிப்புகள் இடம்பெற வேண்டும் என்றும், முன்மொழியப்பட்ட பசுமை விமான நிலையம் மற்றும் சென்னை விமான நிலையம் இடையேயான சாலை, ரயில் இணைப்பு போக்குவரத்து தேவைகளையும் ஆராய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலம், நிலப்பரப்பு ஆய்வு, புவி தொழில்நுட்ப ஆய்வு, வானிலை மதிப்பீடு, நீர் மேலாண்மை போன்றவைகளை ஒன்றோடொன்று இணைத்தல் குறித்தும் ஆய்வில் இடம்பெறவேண்டும் என நிபந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







