தஞ்சையில் பயங்கரம் – தாய், தந்தையை கொடூரமாக வெட்டிக் கொன்ற மகன் கைது

தாய், தந்தையை மனநலம் பாதிக்கப்பட்ட மகன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தில்லையம்பூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (80). இவரது மனைவி லட்சுமி.…

தாய், தந்தையை மனநலம் பாதிக்கப்பட்ட மகன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தில்லையம்பூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (80). இவரது மனைவி லட்சுமி. இவர்களது இளைய மகன் ராஜேந்திரன் திருமணம் செய்து கொள்ளாமல் தாய், தந்தையுடன் வசித்து வருகிறார். திருமணம் ஆகாத மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரனுக்கு சற்று மனநிலை பாதித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் அடிக்கடி தனது பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மனநிலை சரியில்லாத மகனை தனியாக விட்டு, விட்டு கோவிந்தராஜும், அவரது மனைவி லட்சுமியும் உறவினர்கள், நண்பர்கள் வீடு உள்பட எங்கும் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன் தனது பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ராஜேந்திரனை அவர்கள் கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் தன்னை பெற்ற தாய், தந்தை என்று பாராமல் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தலை, கழுத்து, கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டி கொடூரமாகக் கொன்றார். 2 நாட்கள் பெற்றோரது உடல்களுடன் வீட்டில் தங்கியிருந்த அவர், ஒன்றும் நடக்காததுபோல் பால் வாங்குவது, வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது, மேலும் கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்கி சமைத்து சாப்பிடுவது ஆகியவற்றை சாதாரண மனிதர்கள் போல் செய்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் பட்டீஸ்வரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வீட்டுக்கு உள்ளே சென்ற பார்த்தபோது அங்கு கோவிந்தராஜனும், லட்சுமியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அக்கம், பக்கத்தினருக்கு தெரிய வரவே, கோவிந்தராஜின் வீட்டின் முன்பு பொதுமக்கள் திரண்டனர்.

தடயவியல் துறை நிபுணர்கள், இறந்தவர்களின் உடல்களில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் இருவரது உடல்களும், உடற்கூராய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர். ராஜேந்திரன் மனநலம் பாதிக்கப்பட்டதால் மனநல சிகிச்சை அளிக்க காவல்துறையினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர். தாய், தந்தையை, பெற்ற மகனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.