திருச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலையில் “சமூக விரோதிகளின் கூடாரமாக” மாறிவரும் பொங்கலூர் சுங்கச்சாவடி செயல்படாத நிலையில் உள்ளதால் சுங்கச்சாவடியை அகற்றப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோயம்புத்தூரில் இருந்து பல்லடம் வழியாக திருச்சி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை NH81 ல் கடந்த 2006ம் ஆண்டு பல்லடத்தை அடுத்த பொங்கலூர் அருகே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. பல்லடம் மற்றும் பொங்கலூர் பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் உள்ளதால் பொங்கலூரில் சுங்கச்சாவடி அமைந்தால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் எனக்கூறப்பட்டது.எனவே பொதுமக்களின் தொடர் போராட்டத்தினால் திறப்பு விழா காண்பதற்கு முன்னதாகவே பொங்கலூர் சுங்கச்சாவடியை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. 2006 ஆம் ஆண்டு மூடுவிழா கண்ட சுங்கச்சாவடி தற்பொழுது வரை அகற்றப்படாமலேயே உள்ளது.
சாலையின் நடுவே செயல்படாமல் உள்ள இந்த சுங்கச்சாவடியால் இரவு நேரங்களில் விபத்துகள் அதிக அளவில் நடைபெறுவதாகவும், லாரி ஓட்டுனர்கள் வாகனத்தை இங்கு நிறுத்திவிட்டு மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் செயல்படாமல் உள்ள இந்த சுங்கச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த அபாய எச்சரிக்கை மின்விளக்குகள் திருடப்பட்டதால் இந்த சாலையில் இரவு நேரங்களில் பயணிக்கும் வாகனங்கள் நடுவே சுங்கச்சாவடி இருப்பது தெரியாமல் சுங்கச்சாவடி தடுப்புகளில் மோதி விபத்துக்குள்ளாவதுத் தொடர் கதையாகி வருகிறது.தற்பொழுது திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கான திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 16 வருடங்களாக அகற்றப்படாத இந்த சுங்கச் சாவடியை மீண்டும் தொடங்குவதற்கு நெடுஞ்சாலைத்துறை திட்டமிடுகிறதா என்ற ஐயம் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சமூக விரோதிகளின் கூடாரமாகவும், அதிக அளவில் விபத்து ஏற்படக் காரணமாக உள்ள இந்த செயல்படாத சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து பல்லடம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது இரண்டு
வழிச்சாலையாக உள்ள இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான திட்ட
அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டால் இந்த சுங்கச்சாவடி அகற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
ரெ.வீரம்மாதேவி
“சமூக விரோதிகளின் கூடாரமாக” மாறிவரும் பொங்கலூர் சுங்கச்சாவடி -அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: