பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவாளர்கள் லஞ்சம் கேட்பதாகவும், அலுவலகத்திற்கு வருபவர்களிடம் மரியாதை குறைவாக நடப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்து பத்திர எழுத்தாளர்கள் இன்று முதல் ஒரு வார வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தின் கீழ் 39 கிராமங்கள்
அடங்கியுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் பத்திரப்பதிவு துறையில் அதிகப்படியான
வருவாய் தரும் பகுதியாக பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது.
பத்திரப்பதிவாளர்களான பிரவீனா, ஈஸ்வரி ஆகியோர் சமீபத்தில் திருப்பூரில் இருந்து பணி மாறுதலாகி பல்லடம் வந்துள்ளனர். இவர்கள் வந்தபின் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக பத்திர எழுத்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இன்று முதல் சனிக்கிழமை வரை ஒரு வாரத்திற்கு பத்திரப்பதிவு பணிகள் நடைபெறாது என பல்லடம் பகுதி பத்திர ஆவண எழுத்தர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் பத்திரப்பதிவு துறை மேற்கு மண்டல டிஐஜி சாமிநாதன் பல்லடம் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் பத்திர எழுத்தாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையானது தோல்வியில் முடிந்தது. இதன் பின்னர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என பல்லடம் பத்திரப்பதிவு அலுவலக பதிவாளர்கள் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.பதிவாளர்களின் பேச்சுவார்த்தையும் தோல்வியையே எட்டியது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் எழுத்தர்கள் அறிவித்தபடி இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். நாள் ஒன்றுக்கு பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திர எழுத்தாளர்கள் போராட்டத்தால் 15 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என கணக்கிடப்படுகிறது.







