போரில் மனைவி, குழந்தைகளை இழந்தும் பணியில் பின்வாங்காத ‘பாலஸ்தீன பத்திரிகையாளர்’ – கௌரவிக்கும் கேரள அரசு!

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் தனது இரண்டு குழந்தைகளை இழந்த பின்னும் களத்தில் நின்ற செய்தியாளருக்கு சிறந்த பத்திரிகையாளருக்கான விருது வழங்கி கேரள அரசு கவுரவிக்க உள்ளது. இஸ்ரேலுக்கும்,  ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த…

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் தனது இரண்டு குழந்தைகளை இழந்த பின்னும் களத்தில் நின்ற செய்தியாளருக்கு சிறந்த பத்திரிகையாளருக்கான விருது வழங்கி கேரள அரசு கவுரவிக்க உள்ளது.

இஸ்ரேலுக்கும்,  ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த வருடம் அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது.  தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடங்கினர்.  இதில் ஏராளமான ராணுவ வீரர்களும்,  பொதுமக்களும் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,422-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை சுமார் 65,087 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே,  கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. இதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என இஸ்ரேல் இதனை பிரகடனப்படுத்தினாலும், இதில் பெரும்பாலும் உயிரிழந்து வருவது சாமானிய பொதுமக்கள் என்பது அதிர்ச்சியூட்டும் உண்மையாகும்.

இந்த போர் துவங்கியதில் இருந்தே ஏராளமான செய்தியாளர்கள் களத்தில் இருந்து போர் தொடர்பான செய்திகளை எடுத்துக் கூறி வருகின்றனர். அந்த வகையில் காசா பகுதியை சேர்ந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் வாயில் அல் தஹ்துத், துவக்கம் முதலே போர் தொடர்பான தகவல்களை தான் பணியாற்றும் தொலைக்காட்சிக்கு வழங்கி வருகிறார். இந்தப் போரில் தஹ்துத்தின் மனைவி, இரண்டு குழந்தைகள் உட்பட அவரது உறவினர்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், களத்தில் இருந்து செய்திகளை வெளியிடுவதில் இருந்து பின் வாங்காமல் தஹ்துத் தொடர்ந்து பணியாற்றி வந்தார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த ஏவுகணை தாக்குதலின் போது இவருடன் பணியாற்றிவந்த ஒளிப்பதிவாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே அவரிடம் இருந்து கீழே விழுந்த கேமராவை எடுத்து, அந்த சம்பவத்தை தஹ்துத் பதிவு செய்தார். இதில் அவர் படுகாயம் அடைந்ததை அடுத்து தற்போது கத்தாரில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதன்பிறகும் மீண்டும் போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிக்கு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

இவரது தியாகத்தை போற்றும் விதமாக பல்வேறு செய்தியாளர் சங்கங்களும் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கேரளா மீடியா அகாடமி ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறந்த ஊடகவியலாளருக்கான விருது இந்த ஆண்டு தஹ்துத்திற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை முதலமைச்சர் பினராயி விஜயன் வழங்குவார் எனவும், இந்த விருது மற்றும் பதக்கத்துடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் தஹ்துத்திற்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.