கேரள சட்டப்பேரவை கூட்டத்தை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பார்வையிட்டார்.
திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை தொடர்பாக இந்தியாவில் உள்ள பல்வேறு மதத்தினர், வெவ்வேறு மதச் சட்டங்களைப் பின்பற்றி வருகின்றனர். இதனை மாற்றி, நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொது சிவில் சட்டத்துக்கு பல்வேறு கட்சிகள், பழங்குடியின மக்கள், இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள் மற்றும் சமூக அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் கேரள சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று தொடங்கியது. இன்று பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரள மாநில அரசு சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தது. இந்த கூட்டத்தில், பொது சிவில் சட்டத்துக்கு எதிராக முதலமைச்சர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார். மேலும், பொது சிவில் சட்ட முன்வடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே, கேரள சட்டமன்ற கூட்டத்தை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பார்வையிட்டார். கேரள சட்டமன்ற கூட்டத்தின் நடைமுறைகளை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.







