சென்னையில் நடிகர் ராகவா லாரன்ஸ், ட்ரம்ஸ் சிவமணி, பாடகரான செந்தில், ராஜலட்சுமி ஆகிய பிரபலங்கள் வசித்து வரும் ஜெயின்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் சேதம் அடைந்து காணப்படுவதால், அச்சம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள அருணாச்சலம் சாலையில் ஜெயின்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் (Jains Westminster) என்ற அடுக்கு மாடி குடியிருப்பு கடந்த 2015 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த குடியிருப்பில் A,B,C என மூன்று பிளாக்குகள் உள்ளன. ஒவ்வொரு கட்டடத்திலும் 200 வீடுகள் என மொத்தம் 600 வீடுகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த 3 கட்டடங்களிலும் அவ்வப்போது சிறிய சிறிய விரிசல்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் இறுதி வாரத்தில், இந்த குடியிருப்பில் உள்ள B பிளாக்கில் மேற்கூரை இடிந்து விழுந்து சுற்றி உள்ள சுவர், தரை மற்றும் பில்லர்களை சேதப்படுத்தியது. இந்த சம்பவம் நடைபெறும் பொழுது அப் பகுதியில் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து குடியிருப்புவாசிகள் கடந்த ஜூலை மாதம் 27-ஆம் தேதி சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து அவரிடம் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட ஆணையர் ராதாகிருஷ்ணன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த குடியிருப்பு கட்டிடத்தில் A மற்றும் B பிளாக்குகளில் நிறைய பகுதிகளில் இது போன்று சேதங்கள் இருப்பதாகவும் குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டி வருவதோடு, எப்போது என்ன நடக்குமோ என்று மிகுந்த அச்சத்தில் இருப்பதாக கூறியுள்ளனர். இதில் குறிப்பாக இந்த குடியிருப்பில் பொதுமக்களை தவிர முக்கிய திரைப்பட நடிகர்களும் வசித்து வருகின்றனர். அதில் நடிகர் ராகவா லாரன்ஸ், ட்ரம்ஸ் சிவமணி, சாய் தன்சிகா, ஹரிஷ் உத்தமன் மற்றும் பாடகர் செந்தில், ராஜலட்சுமி மற்றும் பிரபல வர்த்தக ஆய்வாளர் பி.ஆர் சுந்தர் உட்பட பலர் இந்த குடியிருப்பில் வசித்து வருகின்றனர்
ராகவா லாரன்ஸ் B – பிளாக்கில் வசித்து வருவதாகவும், ட்ரம்ஸ் சிவமணி A – பிளாக்கில் வசித்து வருவதாகவும் , மற்றவர்கள் C- பிளாக்கில் வசித்து வருகின்றனர். ராகவா லாரன்ஸ் மற்றும் ட்ரம்ஸ் சிவமணி வசித்து வரும் A மற்றும் B பிளாக்க்கில் தான் அதிகமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








