பாக். பல்கலையில் குண்டுவெடிப்பு- 4 பேர் பலி

பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழகத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 3 சீனர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகலில் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.…

பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழகத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 3 சீனர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகலில் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. இது மனித வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம் என கராச்சி நகர காவல்துறை தலைவர் குலாம் நபி மேமோன் கூறியுள்ளார்.

பிற்பகல் சுமார் 3 மணியளவில், பல்கலைகழகத்தின் வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிந்த வேன் திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவம் சீன மொழி பயிற்றுவிக்கும் கன்பூசியஸ் என்ற மையத்தின் அருகே நிகழ்ந்துள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில், 2 பெண்கள் உட்பட 3 சீனர்கள் மற்றும் ஒருவர் என மொத்தம் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர். இதில் கன்பூசியஸ் மையத்தின் இயக்குநர் ஹுவாங் கிபிங், டிங் முபெங், சென் சாய் ஆகிய 3 பேர் சீனர்கள் அடங்குவர். மற்றொருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் ஆவார். இவர் அவர்களுடைய வாகன ஓட்டுனர் காலித் என்பது தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலில் பலர் படுகாயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. படுகாயமடைந்த பலர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.

குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதிக்கு விரைந்த மீட்பு மற்றும் பாதுகாப்பு படையினர் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரின் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில், தாக்குலுக்குள்ளான வேனில் 8 பேர் வரை இருந்தனர் என போலீசார் கூறுகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பலூச் விடுதலை இராணுவம் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது. ஷாரி பலோச் என்ற பிரம்ஷ் எனும் பெண் போராளி தான் இந்த உயிரிழப்புப்படை தாக்குதலில் ஈடுபட்டதாகவும் இந்த அமைப்பு அறிவித்துள்ளதாக தனியார் செய்தி ஊடகம் குறிப்பிட்டுள்ளது

கடந்த ஆண்டு கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதேபோல சீனாவை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.