உலகப்புகழ் பெற்ற இயக்குநர்கள் பலரும் தங்களின் இன்ஸ்பிரேஷனாகவும், ஆஸ்தான குருவாகவும் ஏற்றுக்கொண்ட இயக்குநர் அகிரா குரசேவா. ஜப்பானிய சினிமா இயக்குநரான இவரின் நூற்றாண்டுகள் பேசும் ஓராண்டு சாதனை தான் Seven Samurai (செவன் சாமுராய் (ஏழு சாமுராய்)). 1954-ல் இந்தப் கருப்பு-வெள்ளை படம் வெளிவந்தது. இன்றோடு 68 ஆண்டுகள் கடந்துவிட்டது. இப்படத்திற்கு பிறகு பல சாமுராய் படங்கள் வெளிவந்து விட்டாலும் இன்றும் அசைக்கமுடியாத இமாலய உச்சமாய் வானுயர நிற்கிறது ‘செவன் சாமுராய்’.
இப்படத்தின் கதை 16ம் நூற்றாண்டில் நடக்கிறது. ஜப்பானின் மலையடிவாரத்தில் விவசாயத்தை மையமாக கொண்ட ஒரு சிறிய கிராமத்தை பண்டிட்டுகள்( கொள்ளையர்கள் கூட்டம்) நோட்டமிடுவார்கள். பயிர்கள் அறுவடைக்கு தயாராகி வருவதால் சில நாட்கள் கழித்து வந்து கொள்ளையடிக்கலாம் என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிடுவார்கள். பண்டிட்டுகளின் இந்த சதி திட்டத்தை அக்கிராமத்தை சேர்ந்த ஒருவர் கேட்டுவிடுகிறார். இதனைத்தொடர்ந்து ஒட்டு மொத்த கிராமும் அதிர்ச்சிக்குள்ளாகிறது. ஏற்கனவே பண்டிட்டுகளால் தானியங்கள், உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டதோடு அக்கிராம பெண்களும் கடத்தப்பட்டிருக்கிறார்கள். தங்களின் நிலையை நினைத்து அம்மக்கள் பெரும் துயருக்கு ஆளாகின்றனர்.
நகரத்துக்கு சென்று சாமுராய்கள் எனப்படும் போர் வீரர்களை வாடகைக்கு அழைத்து வந்து பண்டிட்டுகளுக்கு எதிராக போராடி தங்களை தற்காத்துக் கொள்ளலாம் என அந்த கிராமத்தின் பெரியவர் ஆலோசனை சொல்கிறார். சாமுராய்களால் தங்களுடைய பெண்கள் கவரப்படலாம் எனக்கூறி அதற்கு எதிர்ப்புகளும் வருகிறது. இருப்பினும் கொள்ளையர்களுக்கு சாமுராய்கள் தேவலாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள். சாமுராய்களுக்கு கொடுப்பதற்கு பணமோ, பொருளோ அவர்களிடம் இல்லை. அவர்களுக்கு சோறு மட்டும் தான் போடமுடியும். எனவே, திருவிளையாடல் படத்தில் வரும் தருமி போல, சோற்றுக்கே வழியற்ற சாமுராய்களை தேடி நகரத்திற்கு கிராம மக்கள் செல்கின்றனர். 7 சாமுராய்கள் தேவை எனும் சூழலில் 6 சாமுராய்கள் மட்டுமே கிடைக்கின்றனர். வறுமையில் வாடும் ஒரு வேடிக்கையான மனிதனும் ( ‘கிக்குசியோ’எனும் இந்த கதாப்பாத்திரத்தின் செயல்கள் நகைச்சுவாகவும் ரகளையாகவும் இருக்கும்) தன்னை சாமுராய் எனக்கூறிக்கொண்டு அவர்களை பின் தொடர்கிறான். இறுதியில் 7 வது சாமுராயாக அவனும் ஐக்கியமாக அனைவரும் கிராமத்தின் பக்கம் நிற்கிறார்கள்.
‘சிமுரா’ என்ற மூத்த சாமுராய் நிதானமாகவும், கவனமாவும் திட்டமிட்டு மற்றவர்களை வழிநடத்துகிறார். பண்டிட்டுகளுக்கு எதிரான போருக்கு அந்த கிராமத்தையும், மக்களையும் சாமுராய்கள் தயார் செய்கிறார்கள். Rest is History. இதற்கு மேல் கதையை சொல்லி உங்களின் திரை அனுபத்தை கெடுக்க நாங்கள் விரும்பவில்லை. குரசேவாவின் சினிமாக்கள் ஜப்பானிய மக்களுடைய பண்பாடு, வரலாறு, வாழ்க்கைமுறை, சமூக அமைப்பு ஆகியவைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. அதனுடைய உச்சமாகவே Seven samurai பார்க்கப்படுகிறது.
இத்திரைப்படத்திற்கு பிறகு தான் சாமுராய்கள் குறித்து உலகமே அறிந்து கொண்டது எனவும் கூறலாம். இது ஜப்பானிய படமாக இருந்தாலும் உலகின் எந்தவொரு நிலம், மக்கள் மற்றும் சமூக சூழலுக்கும் பொருந்தக்கூடிய வகையில் இத்திரைக்கதை கையாளப்பட்டிருக்கும். இத்திரைப்படத்தை Inspiration-ஆகக் கொண்டு உலகம் முழுவதும் பல படங்கள் உருவாக்கப்பட்டுள்ளது(இந்த கட்டுரையை proof check பார்த்தவர்கூட, ‘என்ன இந்த கதை கும்கி படம் மாதிரியே இருக்கே’ என்று கேட்டார்). இந்த படத்தின் கதையை மையமாக கொண்டு ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட Magnificiant seven(மேக்னிபிஷண்ட் செவன்) படமும் கிளாலிக் ரகத்தில் இணைந்து கொண்டது. ஜாப்பானின் சாமுராய்கள் இப்படத்தில் ‘கவ் பாய்’களாக மாற்றப்பட்டு சிறப்பாக கையாளப்பட்டிருப்பார்கள்.
அதெல்லாம் சரி இதை ஏன் மிஷ்கினின் செவன் சாமுராய் என்று குறிப்பிடுகிறோம் என்று யோசிக்கிறீர்களா..? எந்த ஒரு கலைப்படைப்புமே அதை ரசிப்பவர்களாலும், கொண்டாடுபவர்களாலும் தான் முழுமையடைகிறது.
“என் வாழ்க்கையை விரித்து, எனக்கு சிறகுகள் முளைக்க வைத்து வானில் பறக்க வைத்த படம் தான் செவன் சாமுராய். என்னுடைய ஜென் குருவாக தான் நான் அகிரா குரசேவாயை பார்க்கிறேன். கிட்ட தட்ட 1000 முறை அப்படத்தை பார்த்துவிட்டேன். இன்னும் 2000 முறை அப்படத்தை பார்க்க ஆசைபடுகிறேன். வாழ்க்கையில் மனதளவில் கஷ்டப்படும் மனிதர்களுக்கெல்லாம் நான் பரிந்துரைக்கும் மாத்திரை செவன் சாமுராய் படம் தான். உலகின் 9வது அதிசயமாக செவன் சாமுராய் படத்தை சேர்க்கலாம்”.
மேலே சொன்னவை எல்லாம் செவன் சாமுராய் குறித்து மிஷ்கின் பாராட்டிய கருத்துக்களில் 0.00007 கூட இருக்காது. தான் செல்லுமிடம் எல்லாம், பார்க்கும் மனிதர்களிடம் எல்லாம் இப்படம் குறித்து பேசியிருக்கிறார். தமிழ் சமூகத்தில் உலக சினிமா ஆர்வர்கள் மத்தியில் மட்டுமே விவாதிக்கப்பட்டிருந்த அகிரா குரசேவாவையும், அவரின் செவன் சாமுராய் படத்தையும் வெகுசன மக்களிடத்தில் கொண்டு சேர்த்ததின் முதன்மை பங்கு மிஷ்கினிக்கே உரியது.
இன்று நாடே கொண்டாடும் படமாக கே.ஜி.எஃப் பார்க்கப்படுகிறது. மிஷ்கினின் அடுத்த பேட்டியில் கே.ஜி.எஃப் பார்த்தீர்ங்களா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டால் கூட, செவன் சாமுராயாய் வைத்தே சம்பவம் செய்வார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உலகப்புகழ் பெற்ற கொரிய இயக்குநரான bong joon-ho(பாங் ஜூன் ஹோ)வின் கூற்று ஒன்று உள்ளது. ‘சப்-டைட்டில் எனும் ஒரு இஞ்ச் தடையை நீங்கள் கடந்துவிட்டால் உலகின் பல அற்புதமான படங்கள் உங்களுக்கு அறிமுகமாகும்’ என்பதே அது. ஆனால் மிஷ்கினிடம் கேட்டால், ‘செவன் சாமுராய் படத்தை கண்டுகளிப்பதற்காகவே நீங்கள் ஆங்கில மொழியை… இல்லை இல்லை ஜப்பானிய மொழியையே கூட கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லக்கூடும். எனவே தான் சொல்கிறோம் இது மிஷ்கினின் ‘செவன் சாமுராய்’.








