கடையநல்லூர் அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூர் வேதக்கோயில் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோபால். பெயின்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப் படுகிறது.
இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள், கோபாலைக் கண்டித்துள் ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் சிறுமியின் தாய்மாமா மாரிபாண்டி என்ப்வர், கோபாலின் தலையில் பாறாங்கல்லை தூக்கிப் போட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கோபால், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மாரிபாண்டி, வேலுதாய் ஆகியோரை கைது செய்தனர். கொல்லப்பட்ட கோபாலுக்கு இரண்டு மனைவிகள், ஒரு மகன் உள்ளனர்.
பெயின்டர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







