“நெல் கொள்முதல் ஈரப்பத அளவை தளர்த்த வேண்டும்!” – திருமாவளவன் வலியுறுத்தல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை தளர்த்திட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை தளர்த்திட அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் தற்போது குறுவை சாகுபடி, வடகிழக்கு பருவமழை காலத்தில் நடைபெறுவதால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ளும் நிலைக்கு ஆளாகின்றனர். மேட்டூர் தண்ணீர் மிகவும் தாமதமாக திறக்கப்பட்டதால் விவசாயிகள் ஏற்கனவே பாதிப்படைந்துள்ள நிலையில், இந்தப் பருவமழை சூழல் அவர்களை மேலும் நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது.

தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் (DPC), தற்போது அனுமதிக்கப்படும் நெல் ஈரப்பத அளவை 17 சதவீதம் என ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது.
அறுவடையாகும் நெல் பருவமழையின் காரணமாக கூடுதல் ஈரப்பதம் கொண்டுள்ளது. நெல் உரிய ஈரப்பதமான 17 சதவீதத்திற்கு வரவேண்டுமெனில், அதனை உலர்த்த வேண்டும். விவசாயிகளிடமோ, நெல் கொள்முதல் நிலையங்களிலோ நெல்லை உலர்த்துவதற்கு உரிய வசதியில்லை. இதனால் நெல் கொள்முதல் ஆகவில்லை என்பதுடன், பருவ மழையினால் மேலும் ஈரப்பதத்தின் அளவு உயருகிறது. எனவே விவசாயிகள் கொள்முதலுக்கான ஈரப்பத அளவினை 17சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்திட வலியுறுத்தி போராடுகின்றனர்.

2019-20 மற்றும் 2020-21 ஆண்டுகளில் இந்திய ஒன்றிய அரசு 19%-20% ஈரப்பதம் வரை கொள்முதல் செய்ய அனுமதி அளித்தது என்பதை தற்போது நினைவூட்டுகிறோம்.
எனவே, தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் ஈரப்பத அளவை தளர்த்த உடனடியாக இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. சில நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் உடனடியாக கொள்முதல் செய்ய போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதையும் விவசாயிகள் சுட்டிகாட்டியுள்ளனர். தமிழ்நாடு அரசு இதனைக் கவனத்தில் கொண்டு விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.