மறைந்த செஃப் தாமுவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

உடல்நலக் குறைவால் உயிரிழந்த செஃப் தாமுவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு (எ) தாமோதிரன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 72. செஃப் தாமுவுக்கு பொதுமக்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் அதிமுக பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பிரபல சமையற் கலைஞர் “பத்மஸ்ரீ” செப் தாமு (எ) தாமோதரன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

செப் தாமு இந்தியாவின் சிறந்த சமையற்கலைஞர்களில் ஒருவராக அறியப்பட்டவர். சமையலில் கின்னஸ் சாதனை புரிந்தவர்.

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா மீதான பெரும் பற்றால் 2013-ம் ஆண்டில் தன்னை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டவர்.

எப்போதும் இன்முகத்துடன், தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளில் தோன்றி மகிழ்வித்த அவரை தமிழக மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.

செப் தாமுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், சமையல் துறை மற்றும் சின்னத்திரையைச் சார்ந்தோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.