ராகுல் காந்திக்கு ஆதரவாக டெல்லியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற ப. சிதம்பரத்தை, போலீசார் தள்ளியதில் அவரது விலா எலும்பு முறிந்ததாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
நேஷ்னல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை, நிதிமுறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரான ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பி இருந்தது. இதையடுத்து, அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று அவர் ஆஜரானார்.
முன்னதாக, அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பேரணி நடைபெற்றது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் வரை நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அமலாக்கத்துறை அலுவலகத்தை அடைந்ததும், அங்கு, விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரமும் பங்கேற்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, போலீசாருக்கும் காங்கிரசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், ப. சிதம்பரத்தை போலீசார் கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதில், அவரது இடது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ப. சிதம்பரம், பலம் மிகுந்த மூன்று போலீசார் உங்கள் மீது மோதும்போது நீங்கள் பாதிக்கப்படாமல் தப்பிக்க வேண்டுமானால் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். தனக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு 10 நாட்களில் தானாகவே சரியாகிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாகக் கூறியுள்ள ப. சிதம்பரம் தான் நன்றாக இருப்பதாகவும், தனது வழக்கமான பணிகளை நாளை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.









