உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக நமது நாடு உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியுள்ளார்.
75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக் கொடியைப் போற்றும் வகையில் பறக்கவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் அனைவரது டிபியையும் தேசியக் கொடியாக மாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது டிபியில் தேசியக் கொடியை வைத்து வருகின்றனர்.
சுதந்திர தினத்தை போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், கோவையில் மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று தொடங்கிவைத்தார். எல்.முருகனும் மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடினார். ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் பங்கேற்றுள்ள இந்த மாராத்தான் போட்டி கோவை நவ இந்தியா ஹிந்துஸ்தான் கல்லூரியில் துவங்கியது.
இதைத்தொடர்ந்து, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அறியப்படாத 75 வீரர்களின் வரலாற்றை எடுத்துள்ளோம். இன்று முதல் மூன்று நாட்களுக்கு வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அமைச்சர்கள் முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை டெல்லியில் பாராளுமன்றம் வரை மோட்டார் சைக்களில் பேரணி நடத்தினர்.
இந்திய வெளியுறக் கொள்கையால் உக்ரைன் போரில் சிக்கிய இந்திய மாணவர்களை மீட்டோம். உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக நமது நாடு இருக்கிறது. நமது இளைஞர்கள் வழிகாட்டுயாக இருக்கிறார்கள். வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக நம் இளைஞர்கள் மாற வேண்டும் என்பதே பிரதமரின் கனவு என்றார்.
-ம.பவித்ரா








