பிரான்ஸில் பரவிவரும் காட்டுத் தீயை அணைக்க ஐரோப்பாவில் உள்ள நாடுகள் பலவும் அந்நாட்டுக்கு உதவ முன்வந்துள்ளன.
ஐரோப்பாவில் உள்ள பல்வேறு நாடுகளில் வெப்ப அலை வீசுவதால் பல இடங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீயால் போர்ச்சுக்கலில் அதிக அளவில் உள்ள பைன் காடுகள் தீக்கிரையாகி வருகின்றன. மற்ற ஐரோப்பிய நாடுகளைவிட பிரான்ஸில் அதிக அளவில் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது. பிரான்ஸ் நாட்டின் தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காற்றின் வேகம் குறைவாக இருப்பதால் தீயினை அணைக்கும் பணி துரிதமாக இருந்தாலும், தீ பரவும் வேகம் சற்றும் குறையவில்லை.
இந்த காட்டுத் தீயினால் இதுவரை 74 சதுர மீட்டருக்கும் அதிகமாக காடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. காட்டுத் தீ காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 360க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஜெர்மனி, ரோமானியா, போலாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு வந்து காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிரீஸ் நாட்டில் இருந்து தீயை அணைக்கும் பணிக்காக பிரான்ஸ் நாட்டிற்கு விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்வீடன் சார்பிலும் இரண்டு தீயணைக்கும் வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
-ம.பவித்ரா








