ஒசூர் அருகே நண்பனின் தங்கையை காதல் திருமணம் செய்தவர் கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பள்ளி மாணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த B.கொத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்
சந்தோஷ் (23). இவரும் குமுதேப்பள்ளியைச் சேர்ந்த முருகேசனும் (26) பல வருடங்களாக நண்பர்களாய் பழகி வந்துள்ளனர் .சந்தோஷும், முருகேசனின் தங்கை மீனாவும் காதலித்துள்ளனர். இந்த விஷயம் முருகேசனுக்கு தெரியவந்ததையடுத்து, இருவரும் எதிரிகளாக மாறியுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சந்தோஷ், மீனாவை வீட்டின் எதிர்ப்பை மீறி காதல்
திருமணம் செய்து கொண்டுள்ளார். அண்மையில் முருகேசன் வீட்டார் நிலத்தை விற்க
முயன்றபோது மீனாவின் சொத்தை பிரித்து தருமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது
காதல் திருமணம் செய்ததற்கே கோபமாக இருந்த முருகேசன், சொத்தை கேட்டதால் மிகவும் ஆத்திரமடைந்துள்ளார்.
முருகசேன், தங்கை வீட்டிற்குச் சென்று உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என சந்தோஷை மிரட்டி, அவ்வப்போது போன் மூலமாக சண்டையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தியாகரசனப்பள்ளி என்னுமிடத்தில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பிய சந்தோசை முருகேசன் மற்றும் அவர்களது நண்பர்களான குமார் (24), 12ஆம் வகுப்பு மாணவன் வின்சென்ட் குமார் (17) ஆகிய மூவரும் தியாகரசனப்பள்ளி கிராம மாந்தோப்பிற்கு அருகே வழிமறித்து தாக்க முயன்றுள்ளனர். அப்போது, சந்தோஷ் தப்பியோட முயன்றபோது மூவரும் கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த சூளகிரி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சந்தோஷின் உடலை மீட்டனர். தலைமறைவாக இருந்த சிறுவன் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-ம.பவித்ரா