தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்து உயிரிழந்த பெண் காவலர் கவிதா குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு அருகே மரம் சாய்ந்து விழுந்ததில், முத்தியால் பேட்டை காவல் நிலைய போக்குவரத்து காவலர் கவிதா என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு காவலர் முருகன் லேசான காயங்களுடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அரக்கோணத்தை சேர்ந்த கவிதா 2005-ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்துள்ளார். தற்போது தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மரம் விழுந்ததில் பலியான கவிதாவுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள். 23 வயதான அருண்குமார் சேலம் மகேந்திரா கல்லூரியில் படித்து வருகிறார்.
18 வயதான அவரது மகள் சினேகா பிரியா பிஎஸ்சி நர்சிங் முதலாமாண்டு படித்து வருகிறார். மேலும், இளைய மகன் விஷால் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த பெண் காவலர் கவிதாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.








