குளிர்காலத்தில் மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி?

இதய நோயாளிகள் குளிர் காலங்களில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் இன்னும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏன்? என்பது குறித்து பொது நல மருத்துவர், டாக்டர். அ.ப. ஃபரூக் அப்துல்லா…

இதய நோயாளிகள் குளிர் காலங்களில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் இன்னும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏன்? என்பது குறித்து பொது நல மருத்துவர், டாக்டர். அ.ப. ஃபரூக் அப்துல்லா அவர்கள் தரும் தகவலை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இதயத்தின் ரத்த நாளங்களில் அதிலும் குறிப்பாக இதயத்துக்கு ரத்த ஓட்டமளிக்கும் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டும். அதனால், இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் குறைபாடு இருப்பவர்களை ISCHEMIC HEART DISEASE PATIENTS அதாவது இதய நாள குருதி ஓட்டக்குறைபாட்டு நோய் இருப்பவர்கள் என்று கருதுகிறோம்.

இத்தகையோர் எழுந்து நடந்தாலும் மூச்சு வாங்கும், இளைப்பு எடுக்கும், கொஞ்சம் ஓடினாலும் நெஞ்சுப்பகுதியில் கனமாக இருக்கும், வலி தோன்றும் எப்போதும் ஒரு வித சோர்வும் உடல் வலியும் இருந்து கொண்டே இருக்கும். இரண்டு கால்களின் கணுக்கால் பகுதிக்குக் கீழ் நீர் சுரந்து கொண்டு வீக்கம் இருக்கும்.

இத்தகைய அறிகுறிகள் தென்படுமாயின் அது இதய நோயின் அறிகுறிகள் என்று உடனே உணர்ந்து இதய நோய் சிறப்பு மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை எடுக்க வேண்டும். பொதுவாக இத்தகைய இதய ரத்த நாள சுருக்கம் / அடைப்பு போன்றவை 45+ வயதினருக்கே அதிகம் நேர்கிறது. எனினும் இளைஞர்களுக்கு நேராது என்று அருதியிட்டுக் கூறுவதற்கில்லை. தற்காலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு இளைஞர்கள் மாரடைப்பினாலும் இதய நோயினாலும் மரணமடைந்து வருகிறார்கள் என்பதையும் பதிவு செய்கிறேன்.

குறிப்பாக 60+ வயதுடையவர்களுக்கு இதய ரத்த நாளங்களில் அடைப்பு மற்றும் ரத்த ஓட்டக்குறைபாடு இனம் காணப்படாமல் அமைதியாக ஒளிந்திருக்கும். முதியவர்கள் பொதுவாக தங்களது நடமாட்டத்தை சுருக்கிக்கொள்வதால் வெளியே தெரியாமல் இருக்கும். இத்தகையோர் குளிர் காலங்களில் அதிலும் அதிகாலைப் பொழுதில் வெளியே நடமாடினால் குறிப்பாக வாக்கிங் செல்வது, வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வது, வழிபாட்டுக்கு முன்பு குளிர்ந்த நீரில் (குளிப்பது அதிலும் குளிரான நீர் நிலைகளில் இறங்கிக் குளிப்பது) போன்ற காரியங்களில் அதிகம் ஈடுபடுவதைக் காண முடிகின்றது.

குளிர் காலங்களில் தான் அதிகமான மக்கள் மாரடைப்புக்கு உள்ளாகின்றனர். மாரடைப்பு சார்ந்த மரணங்களும் குளிர் காலங்களில் தான் ஜாஸ்தியாக பதிவாகின்றன. இதனுடன் சேர்த்து முதியோர்களுக்கு மூளை ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு ஸ்ட்ரோக் எனும் பக்க வாதமும் ஏற்படும் வாய்ப்பும் அதிகமாகின்றது.

இதற்கான காரணம் – இதய ரத்த நாள அடைப்பு அல்லது குருதி ஓட்டக் குறைபாடு உள்ள ஒருவர் குளிர்ச்சி மிகுந்த காற்று அல்லது நீருக்கு தன்னை வெளிப்படுத்தும் போது உடல் குளிர்ச்சி அடைகிறது. இத்தகைய குளிர்ச்சி நிலையை நமது உடல் விரும்புவதில்லை. அதனால் உடலை சூடுபடுத்த உடலின் பாகங்கள் முழுவதும் குறிப்பாக தசைகளுக்கு ரத்தம் பாய்ச்சப்படுகிறது.

இதற்காக இதயம் கூடுதலாக பணி புரிந்து துடிக்க வேண்டியிருக்கிறது. இதயத்தின் துடிப்பு விசை மற்றும் வேகம் இரண்டும் ஒருசேரக் கூடுகிறது. ஏற்கனவே பழுதடைந்த இதயத்தை அதிக பணி செய்யக் கட்டாயப்படுத்தும் போது பளுவை ஏற்க முடியாமல் துடிப்பை நிறுத்தி விடுகிறது அல்லது தாறுமாறாகத் துடிக்கிறது. இத்தகைய நிலையில் இதயம் திடீரென்று செயலிழக்கலாம் அல்லது இதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படலாம் அல்லது மூளையின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படலாம் அல்லது இதயம் தறிகெட்டுத் துடிக்கலாம்.

இறுதியில் முறையான அவசியமான அவசர சிகிச்சை கிடைக்காவிடில் மரணம் ஏற்படலாம். எனவே முதியோர்களுக்கும் இதய நோய் / இதய ரத்த நாள அடைப்பு நோய் / இதய ரத்த நாள குருதி ஓட்டத்தில் குறைபாடு இருப்பவர்களுக்கு பொதுவான பணிவான அறிவுரை யாதெனில் குளிர்காலங்களில் தயவு கூர்ந்து வெதுவெதுப்பான சூழ்நிலையில் இருக்கும் வீடுகளை விட்டு வெளியே வராதீர்கள். குளிர்காலங்களில் அதிகாலை வாக்கிங் செல்வதைப்பற்றி நன்கு சிந்தித்து முடிவு எடுங்கள். மாலை நேர வாக்கிங் நல்லது அதிகாலை வழிபாடு போன்றவற்றை வீட்டிலேயே அமைத்துக் கொள்வதைப் பற்றியும் சிந்தியுங்கள். அதுவே உங்களுக்குப் பாதுகாப்பானது.

குளிர்ச்சியான மலைப்பிரதேசங்களுக்குச் செல்வதை தவிர்ப்பது நலம். குளிர்ச்சியான நீரில் குளிப்பதைக் காட்டிலும் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது சிறந்தது. குளிர்ச்சியான நீர்நிலைகளில் அதிகாலை வேளைகளில் இறங்கிக் குளிப்பதை தவிர்க்கலாம். குளிர் காலங்களில் வெதுவெதுப்பான பானங்களை பருகுவதில் நாட்டம் கொள்ளுங்கள். வெதுவெதுப்பாக உணர வைக்கும் ஆடைகளை அணியுங்கள்.

தங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரை மருந்துகளை தவறாமல் உட்கொள்ளுங்கள் மருத்துவரிடம் முறையான மறுசந்திப்புகளை வைத்துக் கொள்ளுங்கள். இதய நோயின் அறிகுறிகள் ஏற்பட்டால் இதய ரத்த நாள அடைப்பு அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே அவசர சிகிச்சைப் பிரிவு உள்ள மருத்துவமனைக்கு விரைந்து செல்லுங்கள்.

புற நோயாளிகள் பிரிவிற்குச் சென்று காத்திருந்து பொன்னான நேரத்தை வீணடிக்காதீர்கள். குளிர் காலத்தில் பலருக்கும் பயன்படும் என்ற நல்லெண்ணத்தில் எழுதப்பட்ட பதிவு.

– டாக்டர். அ.ப. ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.