‘நமது புரட்சித் தொண்டன்’ நாளிதழை தொடங்குகிறார் ஓபிஎஸ்..! ஆக.21-ந் தேதி வெளியீட்டு விழா!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “நமது புரட்சித் தொண்டன்” என்ற புதிய நாளிதழை தொடங்க உள்ளதாகவும், அதன் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 21-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்…

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “நமது புரட்சித் தொண்டன்” என்ற புதிய நாளிதழை தொடங்க உள்ளதாகவும், அதன் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 21-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு,  எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்ற நிலையில் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி, கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார்.

அதிமுகவில் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால்,
இரண்டு அணிகளாக பிளவுபட்டு இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. அதிமுகவில் திடீரென எழுந்த ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அப்போது எழுந்த சர்ச்சையில், ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களோடு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த போட்டியில் பல்வேறு வழக்குகளை சந்தித்தது இறுதியாக இபிஎஸ் வெற்றி பெற்று அதிமுகவின் பொதுச்செயலாளராக அக்கட்சி தொண்டர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன், புகழேந்தி , வைத்திலிங்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தற்போது இவர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் டிடிவி தினகரனுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

அந்த வகையில், கோடநாடு வழக்கில் குற்றவாளிகள் யார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும், அவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் – டி.டி.வி.தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ‘நமது புரட்சித் தொண்டன்’ நாளிதழை தொடங்க உள்ளார். இதன் தொடக்க விழா சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஓட்டலில் வரும் 21ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொண்டர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த நாளிதழ் தொடங்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழ் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வசம் உள்ள நிலையில், ஓபிஎஸ் , நமது புரட்சித் தொண்டன்’ நாளிதழை தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.