தமிழ்நாட்டை சேர்ந்த முதல் பெண் ராணுவ மேஜர் பதவி உயர்வு தொடர்பாக முதலமைச்சசர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்த வாழ்த்து ட்வீட் நீக்கப்பட்டது தொடர்பாக ராணுவ தலைமையகம் விளக்கம் அளித்துள்ளது.
கன்னியாகுமரியை சேர்ந்த இக்னேஷியஸ் டெலோஸ் ஃப்ளோரா இந்திய ராணுவத்தின் மதிப்பிற்குரிய ராணுவ செவிலியர் சேவையில் மேஜர் ஜெனரல் என்ற மதிப்புமிக்க பதவியை அடைந்துள்ளார். அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக துருவா கமாண்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை நேற்று வெளியிட்டது. அதில் COVID-19 இன் போது நிலைமையைக் கையாள்வது உட்பட அவரது 38 ஆண்டுகால நர்சிங் வாழ்க்கையில் தளராத ஆர்வத்துடன் தேசத்திற்கு சேவை செய்துள்ளார். எங்கள் பிரிகேடியர் ராணுவ செவிலியர் சேவை மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டதற்கு வாழ்த்துகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அந்த பதிவை மறுபதிவு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண் மேஜர் இக்னேஷியஸ் டெலோஸ் ஃப்ளோராவை வாழ்த்தி பதிவிட்டிருந்தார். ஆனால் அந்த பதிவு திடீரென நீக்கப்பட்டது, தமிழ்நாடு முதலமைச்சர், தனது மாநிலத்திலிருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய பதிவை @NorthernComd_IA ஏன் நீக்க வேண்டும் என்றும், இதன் பின்னணி என்ன என்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், ராணுவ தலைமையகத்துக்கு முன்பே வடக்கு பிராந்திய பிரிவு பதிவிட்டதால் ட்வீட் நீக்கப்பட்டதாக ராணுவ தலைமையகம் விளக்கம் அளித்துள்ளது. தற்போது ராணுவ தலைமையகம் பகிரிந்த ட்வீட்டை வடக்கு பிராந்திய தலைமையகம் மறுபதிவு செய்துள்ளது.







