சின்னம் இல்லாத ஓபிஎஸ் தரப்பு | தாமரையில் போட்டியிட வலியுறுத்தும் பாஜக?

ஓபிஎஸ் தரப்புக்கு சின்னம் இல்லாததால் தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.   மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கட்சிகள் இடையேயான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளன.  பாஜக…

ஓபிஎஸ் தரப்புக்கு சின்னம் இல்லாததால் தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.  

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கட்சிகள் இடையேயான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளன.  பாஜக கூட்டணியில் பல்வேறு கட்சிகளும் இணைந்து வரும் நிலையில் ஓபிஎஸ் அணியினரும் தாங்கள் தொடர்ந்து பாஜக கூட்டணியிலேயே உள்ளதாகவும்,  கூட்டணியிலிருந்து விலகியது அதிமுக அல்ல,  எடப்பாடி பழனிசாமிதான் என கூறி வருகின்றனர்.

ஆனால் நீதிமன்ற உத்தரவின்படி ஓபிஎஸ் அதிமுகவின் கட்சிக் கொடி,  சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஓபிஎஸ் தரப்புக்கு நிலையான சின்னம் இல்லாததால் தாமரையில் போட்டியிட பாஜக வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஓபிஎஸ் தரப்பு தாமரை சின்னத்தில் போட்டியிட மறுப்பு தெரிவித்து தயங்கி வரும் நிலையில் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் அணி இடம்பெறுமா என்ற சந்தேகம் எழுகிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் அணி அமைத்து அதிமுகவை மீட்க உள்ளதாக ஓபிஎஸ் தரப்பு தெரிவித்து வரும் நிலையில்,  பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக தாமரை சின்னத்தில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தால் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதால் ஓபிஎஸ் தரப்பு தயங்குவதாகக் கூறப்படுகிறது.

இது மட்டுமின்றி,  அமமுகவுடனும் பாஜக தரப்பில் கூட்டணி குறித்து பேசி வருவதாகவும் அவர்களையும் தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக வலியுறுத்துவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இரு தரப்பினருமே தாமரைச் சின்னத்தில் தேர்தலை சந்திக்க தயக்கம் காட்டி வருவதால் கூட்டணி இறுதி செய்வது இழுபறியில் உள்ளது.

டெல்லி தேர்தல் ஆணையத்தை சந்நித்த பின் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்யும் என கூறப்படுகிறது.  மற்றொருபுறம் அதிமுகவுடன், பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை பேச முயற்சித்து வருவதால் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் உடனான கூட்டணி பேச்சுவார்த்தையை பாஜக காலதாமதப்படுத்துவதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.