அதிமுகவில் தார்மீக உரிமையை இழந்தார் ஓ.பி.எஸ் – கே.பி.முனுசாமி

அதிமுகவில் தார்மீக உரிமையை ஓ.பன்னீர்செல்வம் இழந்துவிட்டார் என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். கிருஷ்ணகிரி அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி கூறியதாவது: அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு…

அதிமுகவில் தார்மீக உரிமையை ஓ.பன்னீர்செல்வம் இழந்துவிட்டார் என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி கூறியதாவது:
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஏ மற்றும் பி படிவத்தில் கையொப்பமிடுமாறு கோரியுள்ளார்.

இந்தச் சூழலில் ஏ படிவம் மற்றும் பி படிவம் கையொப்பம் விடுகின்ற தார்மீக உரிமையை பன்னீர்செல்வம் இழந்துவிட்டார். காரணம் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூடுவதை ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து
ஆணையிட்டு அந்த ஆலோசனையின் அடிப்படையில் கடந்த 14ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

அங்கு கட்சியின் வளர்ச்சி குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது. அந்த விவாதத்தில் முக்கிய கரு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்ட கரு குறித்து பொறுப்பாளர்களுடன் விவாதிக்க வேண்டும். மாறாக பன்னீர்செல்வம் பொதுக்குழு நடத்துவதை விரும்பாமல் அவரே ஒரு கற்பனையை ஏற்படுத்திக்கொண்டு இணை ஒருங்கிணைப்பாளர் பொதுக்குழு உறுதியாக நடைபெறும் என தெரிவித்த பிறகு கட்சியினுடைய தலைவர் பொது குழுவிற்கு வந்து விவாதிக்க வேண்டும்.

அந்த பொதுக்குழு தான் முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரம் கொண்டது. மாறாக ஒரு கட்சியின் தலைவர் நீதிமன்றத்திற்கு செல்கிறார். கட்சியின் கொள்கை விதிப்படி கட்சியின் உறுப்பினர் கட்சிக்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றால் கட்சியின் விதிப்படி உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். இதை நன்கு அறிந்த பன்னீர்செல்வம் நீதிமன்றம் செல்கிறார். மேலும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என காவல்நிலையத்தில் மனு கொடுக்கிறார்.

எப்படியாவது அந்த பொதுக்குழுவை நிறுத்தியிருக்க வேண்டும் என்பது அவருடைய எண்ணம். அப்படிப்பட்டவர், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதும் தார்மீக உரிமையை இழக்கிறார்.

14ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 75 மாவட்ட செயலாளர்களில்
70 மாவட்ட செயலாளர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார்கள். பொதுக்குழு முடிந்த பின்பு தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் 74 தலைமை கழக நிர்வாகிகளில் 66 பேர் ஒற்றை தலைமை வேண்டும் என கோரினார்கள். ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தலாக இருந்தாலும் சரி, கட்சியின் பலமாக இருந்தாலும் சரி எண்ணிக்கையின் அடிப்படையில் தான் முடிவு செய்யப்படும்.

தமிழகத்தில் அதிமுக சார்பில் 66 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் ஓபிஎஸ், வைத்தியலிங்கம் மனோஜ் பாண்டியன் தவிர 63சட்டமன்ற உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என்கிறார்கள். மேலும் கட்சியின் உயிர்நாடியான 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,582 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என கேட்கிறார்கள். இதை ஏன் ஓபிஎஸ் ஏற்க மறுக்கிறார். இதை ஏற்றுக்கொண்டு எங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்.

அவரது மகன் முதல்வர் ஸ்டாலினிடம் சென்று உங்கள் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்கிறார். அதை நீர்வளத் துறை அமைச்சர் பொது மேடையில் பேசுகிறார். இதை அதிமுக தொண்டர்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள். பன்னீர்செல்வம் அதிமுகவில் நீர்த்துப் போய் விட்டார்.

அதிமுகவை கபளீகரம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் எனக்கு
எதிரியே. அதில் சசிகலா முதன்மையானவர் என்றார் முனுசாமி.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.