தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மமே மீண்டும் வெல்லும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, 44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பதற்காகவும், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகவும் இரண்டு நாள் பயணமாகச் சென்னை வந்திருந்தார். நேற்று மாலை சென்னை வந்த பிரதமர் மோடி, இன்று சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின்போது பிரதமர் மோடியைத் தனியாகச் சந்தித்துப் பேச ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் பிரதமர் மோடியைத் தனியாகச் சந்தித்துப் பேசவில்லை.
நேற்று பிரதமர் சென்னை வந்திறங்கியபோது, விமான நிலையத்தில் அவரை வரவேற்கும் நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது ஓபிஎஸ் கலந்துகொள்ளவில்லை. ஆனால், இன்று பிரதமரை விமான நிலையத்திலிருந்து அகமதாபாத்திற்கு வழியனுப்பும் நிகழ்வில் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய உடல்நிலை எப்படி உள்ளது என விசாரித்ததாகவும், உடல் நலத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ளச் சொன்னதாகவும் தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மமே மீண்டும் வெல்லும் எனத் தெரிவித்த அவர், மீண்டும் ஒருங்கிணைப்பாளர்கள் இணைப்பு சாத்தியமா எனச் செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.







