விழுப்புரம் பகுதிக்கு போராட்ட நோக்கில் வருவோர் கைது செய்யப்படுவர் என டிஐஜி ஜியாவுல் ஹக் எச்சரித்துள்ளார்.
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி,கத்தாழை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய நிலங்களை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி கிராம மக்களும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், வளையமாதேவி கிராமத்தில் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. இதற்காக கனரக வாகனங்கள், ஜேசிபி எந்திரங்கள் உதவியுடன் என்எல்சி நிர்வாகம் நிலங்களை சமன்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே போலீசாரின் துணையுடன் நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் வளையமாதேவி கிராமத்தில் மேற்கொள்ளப்படுவதற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வளையமாதேவி கிராமத்திற்குள் செல்ல முயன்ற அக்கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டதால், சேத்தியாதோப்பில் மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இதனையடுத்தது விழுப்புரம் சரக டிஐஜி ஜியாவுல் ஹக் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது;
வளையமாதேவி பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பே நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கு இழப்பீடும் அளிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பின் தற்போது தேவை இருப்பதால் என்எல்சி பணி மேற்கொள்கிறது. பயிரிடப்பட்டிருப்பதற்கு இழப்பீடு வழங்கப்பட்டு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக கிராமங்களை சுற்றி 2000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போராட்ட நோக்கில் வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா








