இந்திய ராணுவத்தையும் அவர்களின் திட்டத்தையும் எதிர்க்கட்சிகள் தவறாக எடைபோட வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே.வாசன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், இந்தியாவின் நடுத்தர மாநிலத்தில் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாரதிய ஜனதா கட்சிக்கு நன்றி தெரிவிக்கிறோம். இன்று நடைபெற்ற தேர்தலின் மூலம் அவருடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
மனசாட்சிக்கு ஏற்றவாறு ஒவ்வொரு உறுப்பினரும் திரௌபதி முர்முவுக்கு ஆதரவளித்து வாக்களித்து இருப்பார்கள். அக்னிபத் திட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மனசாட்சிக்கு உட்பட்டு அத்திட்டத்தில் சேருவதற்கு இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர். அதே நேரத்தில் இந்திய ராணுவத்தையும், ராணுவத்தின் செயல்பாடுகளையும் எதிர்க்கட்சிகள் தவறாக எடைபோட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். மேலும், பல்வேறு காரணங்களைக் காட்டி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்க நினைப்பது அவசியம் இல்லாத ஒன்று என்றார்.
-ம.பவித்ரா








