முதலமைச்சரின் புத்தக அரசியல்

அரசியல் தலைவர்கள் சந்திக்கும் போது, பூங்கொத்து, சால்வை வழங்கப்படுவது, ஒரு சம்பிரதாய நிகழ்வாக பின்பற்றப்படுகிறது. ஆனால், அப்படி, சம்பிரதாயமாக வழங்கப்படும் பொருட்களையும், சரித்திர நிகழ்வாக்கும் முயற்சிக்கு வித்திட்டிருக்கிறார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். “புத்தகம் போதும் பூங்கொத்து…

அரசியல் தலைவர்கள் சந்திக்கும் போது, பூங்கொத்து, சால்வை வழங்கப்படுவது, ஒரு சம்பிரதாய நிகழ்வாக பின்பற்றப்படுகிறது. ஆனால், அப்படி, சம்பிரதாயமாக வழங்கப்படும் பொருட்களையும், சரித்திர நிகழ்வாக்கும் முயற்சிக்கு வித்திட்டிருக்கிறார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

“புத்தகம் போதும் பூங்கொத்து வேண்டாம்” என்றக் கூறியதுடன் நின்றுவிடாமல், சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அழைப்பு விடுத்த போதே, மாமல்லபுரத்தின் சிற்பக்கலை நுணுக்கங்களை எடுத்துரைக்கும் புத்தகத்தை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். பிரதமர் மோடியை சந்தித்த போது, முதலமைச்சர் “செம்மொழி சிற்பிகள்” என்ற புத்தகம் வழங்கியதாக தகவல் வெளியானது பெரும் கவனம் ஈர்த்தது.100 தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு, அவர்களின் நூல்கள் உள்ளிட்டவை அடங்கிய நூலை முதலமைச்சர் அளித்ததன் மூலம், தமிழர் குறித்தும், தமிழரின் தேவை குறித்த பார்வையை முதலமைச்சர் ஏற்படுத்தியிருப்பதாக பேசப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த போது, திராவிட பண்பாடு குறித்த ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய Journey of a Civilization: Indus to Vaigai என்ற புத்தகத்தை வழங்கிய முதலமைச்சர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த போது, Multiple facets of my Madurai என்ற புத்தகத்தை வழங்கினார். தமிழர் வாழ்வியலின் செறிவை, புத்தகத்தின் வழி தலைவர்களுக்கு கடத்தும் பணியை முதலமைச்சர் செய்வதாகவே பேசப்பட்டது.

பத்மஸ்ரீ விருது பெற்ற எழுத்தாளரும், ஓவியருமான மனோகர் தேவதாஸ் எழுதிய இந்த புத்தகம், முத்தமிழ் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் அடையாளங்களில் ஒன்று என்கிறார் கலை விமர்சகர் கவிஞர் இந்திரன்.. அதே நேரத்தில் தமிழர்களுக்கென தனி அழகியல் கூறுகள் இருப்பதை இப்புத்தகம் எடுத்து கூறுவதாக தெரிவிக்கும் கவிஞர் இந்திரன், மதுரையில் உள்ள பாரம்பரிய கட்டட கலைகளை விளக்கும் சித்திரங்கள் நிறைந்த புத்தகம் எனவும் தெரிவிக்கிறார்.

கவிஞர் இந்திரன் பேட்டி:-ஒரு புத்தகத்தை கொடுப்பதன் மூலம் எழுத்தாளர்களையும், தமிழ் மக்களையும் முதலமைச்சர் பெருமைப்படுத்தி உள்ளதாக கூறும் அதே வேளையில், தமிழ் மக்களின் கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறை ஆகியவற்றை விவரிக்கும் புத்தகங்களை முதலமைச்சர் தொடர்ந்து பலருக்கும் வழங்கி வருவது அனைத்து தரப்பினரின் வரவேற்பையும் பெற்றுள்ளது என்றே கூறலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.