பீகாரில் எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனை – நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதம்..!

மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றாக இணைந்து செயல்படுவது குறித்து பீகாரில் இன்று நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.   2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது…

மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றாக இணைந்து செயல்படுவது குறித்து பீகாரில் இன்று நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.

 

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முக்தி, உமர் அப்துல்லா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி, பிரதமர் வேட்பாளர் உட்பட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாட்னா சென்றுள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சித்தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ்-வை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மம்தா, அனைத்து எதிர்கட்சிகளும் ஒரு குடும்பமாக ஒன்றிணைந்து பாஜகவிற்கு எதிராக போரிட உள்ளதாக தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்குவதற்கு பாட்னாவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், ராஷ்டீரிய லோக்தள் உள்ளிட்ட கட்சிகள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்காது என தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலங்கானா மாநில முதலமைச்சரும், ‘பாரத ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகரராவ் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.