கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் எழுதிய கடிதத்தில், கொரோனா பரவல் முதல் அலையின் தாங்கள் அறிவுறுத்திய யோசனைகளை மத்திய அரசு புறக்கணித்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர்கள், நாடு முழுவதும் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
கொரோனா தடுப்பூசிக்காக மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்றும் புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகளை நிறுத்திவிட்டு, அதற்காக ஒதுக்கப்பட்ட தொகையை ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகள் வாங்க பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
வேலை இல்லாதவர்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் உணவு தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என்றும் கடிதத்தின் வாயிலாக பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.







