ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை அடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஹிட்டாச்சி குழுமத்தின் துணை நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் நிறுவனத்தால், உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையம் (Global Technology & Innovation Centre) அமைக்கப்பட்டுள்ளது. எரிசக்தித் துறையில் தனித் திறன் வாய்ந்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, இந்த உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை போரூரில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் ஹிட்டாச்சி நிறுவன உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
உலகின் Fortune 500 நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஹிட்டாச்சி நிறுவனம் உலகப் புகழ் பெற்றதாக விளங்குகிறது. உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மையம் சென்னையில் திறப்பது திமுக ஆட்சிக்கும், எனக்கும் பெருமை தருவதாக அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் நல்லாட்சி நடப்பதற்கான அடையாளம். ஆட்சி மீதும், தமிழ்நாட்டின் மீதும் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி.
தமிழ்நாட்டில் பெருமளவு முதலீடுகளை ஈர்க்க அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகிறோம். முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழிற்சார் பூங்காக்களை அமைத்து வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு திறன் மையங்கள் அதிகரித்துள்ளது. 30க்கும் மேற்பட்ட GCCக்கள் திட்டங்களையோ, விரிவாக்கங்களையோ மேற்கொள்வது பெருமையாக உள்ளது.
2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை அடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்ற நம்பிக்கை வளர்ந்து கொண்டே உள்ளது. ஜப்பான் நாட்டிற்கு சென்றபோது கிடைத்த வரவேற்பு தமிழ்நாட்டில் தான் இருக்கிறோமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.







