ஊட்டி மலையில் ரயில்180 சுற்றுலாப் பயணிகளுடன் குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு சென்ற போது தடம் புரண்டது. நல்வாய்ப்பாக பயணிகளில் யாருக்கும் பாதிப்பில்லை.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். இதனால் ஜூன் மாதம் இறுதி வரை மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள்
முன்பதிவு செய்து காத்திருந்து பயணம் செய்து வருகின்றனர்.
வரலாற்று சிறப்புமிக்க ஊட்டி மலை ரயில், கடந்த 2005ம் ஆண்டு ஜூலை மாதம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக (UNESCO World Heritage Site) அறிவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம், ஊட்டி இடையே இந்த மலை ரயில் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு 180 சுற்றுலா
பயணிகளுடன் மலை ரயில் கிளம்பியது. அப்போது குன்னூரில் இருந்து சிறிது தூரம் சென்ற போது திடீரென்று கடைசி பெட்டி தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியதால் மலை ரயில் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மலை ரயில் இயக்குவதில் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளை மலை ரயிலில் இருந்து இறக்கி பேருந்துகள் மூலமாக மேட்டுப்பாளையம் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையேயான ரயில் சேவை நாளை முதல் மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தடம் புரண்ட பெட்டியை மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.







