தமிழ் நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் விஜய் இன்று பதிலளித்து பேசினார். அவர் பேசுகையில், திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
முதலமைச்சர் விஜயின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் வெளி நடப்பு செய்தனர். இருப்பினும் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய் தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த நிலையில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் இன்றைய உரை, சட்டமன்றத்தின் எல்லைகளைத் தாண்டி தமிழகம் முழுவதும் எதிரொலித்த ஒரு முக்கியமான உரையாக அமைந்தது. உண்மையை நேருக்கு நேர் பேசுபவர்களுக்கு எந்த அச்சமும் இருக்காது.
குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்களே விவாதத்தை தவிர்த்து வெளியேறுவார்கள் என்பதற்கு இன்று நடந்த நிகழ்வுகளே சாட்சி. மக்கள் நலன் சார்ந்த கேள்விகளிலும், அரசின் செயல்பாடுகள் குறித்த விளக்கங்களிலும் உறுதியுடனும், அசைக்க முடியாத தைரியத்துடனும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கருத்துகளை தெளிவாக பதிவு செய்தார்.
எதிர்க்கட்சியாக இருப்பதற்காகவே எதிர்ப்பை முன்வைப்பதை விட, மக்களின் பிரச்சினைகளுக்கு ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்த வேண்டிய அவசியத்தை இன்றைய உரை மீண்டும் நினைவூட்டியது. சட்டமன்றம் என்பது உண்மைகள் பேசப்படும் இடமாகவும், மக்களின் குரல் ஒலிக்கும் அரங்கமாகவும் இருக்க வேண்டும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது உரையின் மூலம் வெளிப்படுத்தினார்.
இன்று சட்டமன்றத்தில் மக்களின் குரலாக ஒலித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பேச்சு, இனிவரும் காலங்களிலும் இதேபோல் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும். உண்மைக்கும், மக்கள் நலனுக்கும் ஆதரவாக ஒலிக்கும் அந்த குரலை தடுக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.




