“எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமே குறி வைக்கப்படுகிறார்கள்” – கார்கேவின் ஹெலிகாப்டர் சோதனைக்கு பின் காங்கிரஸ் குற்றச்சாட்டு!

காங்கிரஸ் தலைவர்களின் ஹெலிகாப்டர்களை மட்டும் சோதனை செய்வது வழக்கமானதா? என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் ரத்தோர் கேள்வி எழுப்பியுள்ளார்.  18வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த…

காங்கிரஸ் தலைவர்களின் ஹெலிகாப்டர்களை மட்டும் சோதனை செய்வது வழக்கமானதா? என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் ரத்தோர் கேள்வி எழுப்பியுள்ளார். 

18வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்த நிலையில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை (மே 13) நடைபெறவுள்ளது. ஆந்திரா (25), தெலங்கானா (17), பீகார் (5), ஜார்க்கண்ட் (4) மத்தியப் பிரதேசம் (8), மகாராஷ்டிரா (11), ஒடிசா (4), உத்தரப் பிரதேசம் (13, மேற்குவங்கம் (8), ஜம்மு -காஷ்மீர்(1) என மொத்தம் 96 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்றுடன் இம்மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரமும் ஓய்ந்தது.

இந்நிலையில் நேற்று இந்த பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியும், இந்தியக் கூட்டணியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் நேற்று பீகாரின் சமஸ்திபூர் மற்றும் முசாபர்பூர் மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சமஸ்திபூர் தொகுதியில் கார்கேவின் ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பீகார் காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் ரத்தோர் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில், “காங்கிரஸ் தலைவர்களின் ஹெலிகாப்டர்களை மட்டும் சோதனை செய்வது வழக்கமானதா? என்பதையும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உயர்மட்ட தலைவர்களிடமும் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்பட்டதா? என்பதையும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும்.

https://twitter.com/RajeshRathorre1/status/1789340422466392454

தேர்தல் ஆணையம் இதுபோன்ற சோதனைகள் அனைத்தையும் பகிரங்கப்படுத்த வேண்டும். இல்லையெனில் எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டுமே குறிவைத்து அவர்களைத் தடுக்கிறது என்றும், என்டிஏ தலைவர்களை சுதந்திரமாகச் செல்ல அனுமதிப்பதாகக் கருதப்படும். இவ்வாறு சோதனை செய்யப்பட்ட அனைத்து தலைவர்களின் வீடியோக்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.