தமிழ்நாட்டில் 4.98 % பேர் மட்டுமே ஏழ்மையில் உள்ளனர்: டெல்லியில் அமைச்சர் உரை

தமிழ்நாட்டில் 4.98 சதவீதம் பேர் மட்டுமே ஏழ்மையில் உள்ளதாக அமைச்சர் சக்காரபாணி டெல்லியில் நடந்த மாநாட்டில் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவுத்துறை அமைச்சர்களின்…

தமிழ்நாட்டில் 4.98 சதவீதம் பேர் மட்டுமே ஏழ்மையில் உள்ளதாக அமைச்சர் சக்காரபாணி டெல்லியில் நடந்த மாநாட்டில் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவுத்துறை அமைச்சர்களின் மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு மத்திய வர்த்தகம், தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகங்கள் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி கலந்து கொண்டுள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, தமிழ்நாடு அரசு, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வருமானம் மற்றும் சமூகப் பாகுபாடின்றி உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்திட கடந்த 40 ஆண்டுகளாக அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தினைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 அமல்படுத்தப்பட்ட நிலையிலும் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்ற  நிலையினைத் தொடர்ந்து தமிழ்நாடு கடைபிடித்து வருகிறது.

அனைத்து மக்களுக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதற்கான கொள்கைகளையும், திட்டங்களையும் செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்ட அங்காடிகளில் நடைபெறும் பரிவர்த்தனைகளில் 98% கைவிரல் ரேகை பதிவு மூலம் நடைபெறுகிறது. இதனால் உரிய குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவது உறுதி செய்யப்படுகிறது.

நிதிஆயோக் சமீபத்தில் வெளியிட்ட பல்முனை வறுமைக்குறியீடு அறிக்கையில் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 4.98 % மட்டுமே ஏழ்மையில் உள்ளனர் என்று கூறியுள்ளது. தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தினைச் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருப்பது இச்சாதனைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். ஆனால் அதேவேளையில் இந்தியா முழுவதும் 25.01% பேர்கள் ஏழ்மையில் உள்ளனர் என்றும் நிதிஆயோக் தெரிவித்துள்ளது என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.